- Home
- Sports
- Sports Cricket
- இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை! இமாலய வெற்றி! ஆகாஷ் தீப், சிராஜ் கலக்கல்!
இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை! இமாலய வெற்றி! ஆகாஷ் தீப், சிராஜ் கலக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

India Creates History By Defeating England In 2nd Test
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்) அடித்து சாதனை படைத்தார். பின்பு தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தினார்.
சுப்மன் கில் கலக்கல்
இதனைத் தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 427/6 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் 2வது இன்னிங்சிலும் சூப்பர் சதம் (162 பந்தில் 161) சதம் விளாசி அசத்தினார். கே.எல்.ராகுல் (55), ரிஷப் பண்ட் (65), ரவீந்திர ஜடேஜா (69) ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதனால் 608 என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறல்
அந்த அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் சாக் க்ரோலி ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். பென் டக்கெட் (15 பந்தில் 25) ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார். இதனைத் தொடர்ந்து ஸ்டார் வீரர் ஜோ ரூட்டும் (6) ஆகாஷ் தீப்பின் சூப்பர் பந்தில் கிளீன் போல்டானார். இங்கிலாந்து அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது.
ஆகாஷ் தீப் அசத்தல்
போட்டி நடக்கும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் மழை கொளுத்தியதால் இன்று 5ம் நாள் ஆட்டம் ஒன்றை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆலி போப் 24 ரன்னில் ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார். இதன் பிறகு உடனடியாக அதிரை வீரர் ஹாரி ப்ரூக்கும் (23 ரன்) ஆகாஷ் தீப் பந்தில் எல்பிடபிள்யூ ஆனதால் இங்கிலாந்து அணி 83/5 என பரிதவித்தது.
பென் ஸ்டோக்ஸை தூக்கிய வாஷிங்டன் சுந்தர்
பின்பு ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸும், ஜேமி ஸ்மித்தும் பொறுப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய பவுலர்கள் இருவருக்கும் நல்ல நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக ஸ்பின் பவுலர்கள் பென் ஸ்டோக்ஸ்க்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். இதன் விளைவாக உணவு இடைவேளைக்கு முன்பாக 33 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் (7) பிரசித் கிருஷ்ணா பந்தில் காலியானார்.
இந்திய அணி அபார வெற்றி
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஜேமி ஸ்மித்தும் அடுத்து அவுட்டானர். 99 பந்துகளில் 88 ரன்கள் விளாசிய அவர் ஆகாஷ் தீப் பந்தில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு ஜோஷ் டங் (2) ஜடேஜா பந்தில் சிராஜின் சூப்பர் கேட்ச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் பிரைடன் கார்ஸ் 38 ரன்னில் ஆகாஷ் தீப் பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் ஆனார். இங்கிலாந்து அணி 68 ஓவரில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
கேப்டன்சியில் சுப்மன் கில் சாதனை
பர்மிங்காங் எட்ஜ்பாஸ்டனில் இதுவரை எந்த வெற்றியும் பெறாத இந்தியா முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. முன்னாள் கேப்டன்கள் கங்குலி, தோனி, விராட் கோலி செய்யாத சாதனையை கேப்டனாக பொறுப்பேற்ற 2வது போட்டியிலேயே சுப்மன் கில் செய்து காட்டி வரலாறு படைத்துள்ளார்.