- Home
- Spiritual
- Spiritual: கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், பூ இருந்தால் அபசகுணமா? பரிகாரம் என்ன?
Spiritual: கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், பூ இருந்தால் அபசகுணமா? பரிகாரம் என்ன?
கோவிலில் தேங்காய் உடைக்கும் பொழுது அது அழுகி இருந்தாலோ அல்லது பூ இருந்தாலோ அபசகுணம் என்று பலரும் நினைப்பதுண்டு. இது குறித்து மக்களிடையே பல குழப்பங்கள் உள்ளன. அதற்கு சில ஆன்மீக விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கோவிலில் உடைக்கும் தேங்காய்
நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் வாங்குவது அர்ச்சனை தட்டு தான். இதில் தேங்காய் உடன் சேர்த்து கற்பூரம், வெற்றிலை, பாக்கு, பூ, பழங்கள் என பிற பூஜை பொருட்கள் இருக்கும். தேங்காயைத் தவிர பிற பொருட்களை வெளியில் இருந்து பார்த்து நல்லதா கெட்டதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் தேங்காயை அப்படி வாங்க முடியாது. வெளியில் இருந்து பார்த்து முற்றிய தேங்காயா? இளம் தேங்காயா? என்று கண்டுபிடிக்க முடியுமே தவிர அது கொப்பரையாக இருக்கிறதா? அதில் பூ இருக்கிறதா? உள்ளே அழுகி இருக்கிறதா? என்பதை நம்மால் கண்டறிய முடியாது. கோவிலில் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தாலும், அழுகி இருந்தாலும் அபசகுணம் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் சாஸ்திரப்படி எது நல்லது? எது அபசகுணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தேங்காயில் பூ அல்லது கொப்பரை இருந்தால்
இறைவனுக்கு நீங்கள் உடைக்கும் தேங்காயில் உள்ளே பூ இருப்பது நல்ல சகுணமாக கருதப்படுகிறது. நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிச்சயமாக முடியும் என்பதை குறிக்கிறது. மேலும் எதிர்பாராத வகையில் பணவரவு, மகிழ்ச்சியான செய்திகள், நல்ல நிகழ்வுகள் நடக்க இருப்பதையும், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க இருப்பதையும் குறிக்கிறது. அதேபோல் இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் முழு கொப்பரையாக இருந்தால் விரைவில் நல்ல செய்திகள் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்றும், குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும் என்றும் அர்த்தம். பிரிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். சண்டை சச்சரவுகள், நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.
தேங்காய் அழுகி இருந்தால்
கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் அது அபசகுணம் என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால் ஆன்மீக விளக்கங்களின்படி இது நல்ல சகுனமே. தேங்காய் அழுகி இருப்பது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பிடித்திருந்த துர்சக்திகள், பீடைகள், கண் திருஷ்டிகள் நீங்கி விட்டதை குறிக்கிறது. நீங்கள் எந்த காரியத்தை நினைத்து தேங்காய் உடைத்தீர்களோ அந்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது இதற்கு பொருள். அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவது, கெட்ட கனவுகள் வருவது போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்பதையும் இது உணர்த்துகிறது. எனவே நீங்கள் இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் கவலைப்படவோ, பதட்டப்படவோ தேவையில்லை. இது நல்ல சகுனத்துக்கான அறிகுறிகளே என்று ஆன்மீக அறிஞர்கள் கூறுகின்றனர்.
கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்
இறைவனுக்கு ஏன் தேங்காய் உடைக்க வேண்டும் என்று ஆன்மீகத்தில் சில தகவல்கள் கூறப்பட்டுள்ளன. தேங்காய் என்பது மூன்று கண்களை உடையது. இது மனிதனின் மும்மலங்கலாகிய மாயை, ஆணவம், கன்மம் ஆகியவற்றை குறிக்கிறது. இதை இறைவனுக்கு முன்பாக உடைக்கும் பொழுது என்னுடைய மும்மலங்களையும் உன் முன் உடைகிறேன் என்பது தான் தேங்காய் உடைப்பதற்கு பின்னால் இருக்கும் தார்ப்பரியம் ஆகும். மேலும் இறைவனுக்கு முன்பு தேங்காய் உடைப்பது என்பது ஒரு பக்தன் தன் அகந்தையை இறைவனுக்கு முன்பாக சமர்ப்பிக்கிறான் என்பதை குறிக்கிறது. தேங்காய் உள்ளே இருக்கும் வெள்ளைப்பகுதி தூய மனத்தை குறிக்கிறது. தேங்காய் உடைப்பது என்பது இறைவனிடம் நம் மனதை முழுதாக அர்ப்பணிப்பதாக பொருள்படும்.
எளிய பரிகாரம்
ஒருவேளை நீங்கள் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால், அது அபசகுணம் என்று நீங்கள் கருதினால் அதிலிருந்து மீள எளிய பரிகாரம் செய்யலாம். அதே நாளில் இன்னொரு நல்ல தேங்காயை வாங்கி வந்து, நீங்கள் நினைத்த அதே காரியத்தை மனத்தில் நினைத்து மீண்டும் உடைத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம் அல்லது மனம் நிம்மதி அடைய ஏழைகள் அல்லது ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.