- Home
- Spiritual
- spiritual: இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைக்கக்கூடாதா? தேசமங்கையர்கரசி கூறும் விளக்கம்.!
spiritual: இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைக்கக்கூடாதா? தேசமங்கையர்கரசி கூறும் விளக்கம்.!
இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைப்பது குறித்து இந்து சமயத்தில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இதற்கு சாதகமாகவும், சிலர் பாதகமாகவும் பேசுகின்றனர். ஆனால் இது குறித்த தெளிவான விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைக்கலாமா?
பொதுவாக பூஜையறை என்பது தெய்வங்கள் மற்றும் கடவுள்களுக்கான புனிதமான இடமாக கருதப்படுகிறது. இங்கு இறந்தவர்களின் புகைப்படங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஏனென்றால் இறந்தவர்கள் தெய்வ நிலையை அடைய முடியாதவர்கள் என்பதாலும், தெய்வங்களுக்கு நிகராக அவர்களை பூஜையறையில் வைத்து வழிபடுவது மரபுக்கு எதிரானதும் என்ற கருத்து நிலவுகிறது. சிலர் இறந்தவர்களின் புகைப்படங்களை மீண்டும் பூஜை அறையில் வைத்திருப்பது அவர்களின் ஆன்மாக்கள் மீண்டும் வீட்டுடன் அல்லது குடும்பத்தினருடன் உணர்வுபூர்வமாக பிணைந்து இருக்க வழிவகுக்கும் என்று நம்புகின்றனர். இதன் காரணமாக அந்த ஆன்மா மோட்சம் அடைவது தாமதமாகலாம் என்கிற அச்சமும் நிலவுகிறது.
இறந்தவர்களின் புகைப்படங்களை எங்கு வைக்க வேண்டும்?
அதே சமயம் இறந்தவர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் ஆசீர்வாதங்களை பெறுவதற்காகவும், அடுத்து தலைமுறையினருக்கு முன்னோர்கள் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்துவதற்கும் படங்களை வீட்டில் வைப்பது தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. குறிப்பாக குடும்பத்தில் மறைந்த பெரியோர்கள், தாத்தா, பாட்டி போன்ற படங்களை தனி இடத்தில் குறிப்பிட்ட அலமாரி அல்லது சுவரில் மாட்டி வைப்பது வழக்கம். மறைந்தவர்கள் சாந்தி கிடைக்காமல் அவர்களுக்கு பல ஆசைகளுடன் இறந்திருந்தால் அவர்களின் படங்கள் வழியாக எதிர்மறை ஆற்றல்கள் நிலவக்கூடும் என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது. மறைந்தவர்கள் பக்தி உள்ளவர்களாக இருந்திருந்தால் அவர்களின் படங்களை வீட்டில் வைப்பது நேர்மறை ஆற்றலை இருக்கும் என்று நம்புகின்றனர். இது போன்ற பல கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசிய மங்கையர்கரசி இது குறித்த விளக்கங்களை அளித்துள்ளார்.
பூஜையறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும்
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இறந்தவர்களின் புகைப்படங்களை தெய்வங்களுக்குரிய பூஜை அறையில் வைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார். பூஜை அறை என்பது தூய்மையான தெய்வ சக்திக்கு உரிய இடம் என்பதால் அங்கு இறந்தவர்களின் புகைப்படங்களை வைப்பது ஆன்மீக ரீதியாக சில எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். பூஜையறையை தவிர்த்து வீட்டின் மற்ற அறைகளான உதாரணமாக வரவேற்பறை, படுக்கையறை அல்லது சமையலறை ஆகிய இடங்களில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக அந்த படங்களை மேல் நோக்கி பார்க்காதவாறு சற்று சாய்வாகவோ, சமமாகவோ வைக்க வேண்டும். இறந்தவர்களின் ஆன்மா நம்மை ஆசீர்வதிக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பதால் படங்களை நம்மை நோக்கி தாழ்வாக பார்க்கும் நிலையில் வைக்கலாம் என்று கூறியுள்ளார்.
இறந்தவர்களை வழிபடும் முறை
இறந்தவர்களின் புகைப்படத்திற்கு தனியாக விளக்கு ஏற்றுதல் வேண்டும். மற்ற தெய்வங்களுக்கு ஏற்றும் விளக்கை இவர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. வெள்ளி விளக்கு, காமாட்சி விளக்கு அல்லது அகல் விளக்கு என்று நம் சௌகரியத்திற்கு ஏற்ப விளக்கை வைத்து எந்த எண்ணெய் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு தினமும் விளக்கேற்றி அன்றாடம் தீப தூப ஆராதனைகள் காட்ட வேண்டும். சாமிக்கு ஊதுபத்தி அல்லது கற்பூரம் ஏற்றுவதை முன்னோர்களின் புகைப்படத்திற்கும் காண்பித்து ஆராதனை செய்யலாம். ஏதாவது விசேஷ நாட்களில் அவர்களின் புகைப்படத்திற்கு கீழே இலை போட்டு படையலிடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வசதி இல்லாதவர்கள் புகைப்படத்தை ஹாலுக்கு கொண்டு வந்து அங்கு வைத்து படையல் போடலாம். தெய்வங்களுக்கு செய்வது போலவே மணி அடித்து, கற்பூரம் காட்டி, சாம்பிராணி போட்டு சாமி கும்பிடலாம். இறந்தவரின் புகைப்படங்கள் தெற்கு நோக்கி பார்க்குமாறு படத்தை மாட்ட வேண்டியது அவசியம்.
இறந்தவர்களை தாராளமாக வழிபடலாம் - தேசமங்கையர்கரசி
ஒருவேளை தனது மாமனார் மாமியார் ஆகியோருக்கு பூஜை செய்ய விரும்புபவர்கள் தாராளமாக செய்யலாம். கணவர்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஒரு ஆன்மா இறந்த பிறகு அது இறைவனின் திருவடியை சேர வேண்டும் என்பதே நம்முடைய பிரார்த்தனையாக இருக்க வேண்டும். இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைப்பதா வேண்டாமா என்பது அவரவரின் தனிப்பட்ட நம்பிக்கை, குடும்ப வழக்கங்களை பொறுத்தது. பெரும்பாலான ஆன்மீகவாதிகள் பூஜை அறையில் தெய்வ படங்களை மட்டுமே வைத்து இறந்தவர்களின் படங்களை வேறு தனிப்பட்ட இடங்களில் நினைவுகூறும் வகையில் வைப்பதே சரியான அணுகுமுறை என்பதை பரிந்துரைக்கின்றனர். இது அந்த ஆன்மாக்களுக்கு சாந்தியையும் வீட்டில் நேர்மறை அதிர்வுகளையும் ஏற்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இறந்தவர்களின் புகைப்படங்களை நம் வீட்டில் வைத்து வழிபட்டால் கண்டிப்பாக குடும்பத்தில் விருத்தி, குடும்பத்தில் எந்தவிதமான சச்சரவுகள் இல்லாத நல்ல வாழ்க்கை அமையும் என்று தேச மங்கையர்கரசி விளக்கியுள்ளார்.