Spiritual: இறந்தவர்களின் உடைகளை என்ன செய்வது? தேச மங்கையர்கரசி விளக்கம்
இறந்தவர்களின் உடைகளை என்ன செய்வது என்பது பலரின் மனதில் எழும்பும் ஒரு கேள்வி. இது உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமல்லாமல் ஆன்மீக நம்பிக்கைகளையும் கொண்டுள்ளது. இறந்தவர்களின் பொருட்களை கையாளுவது குறித்து சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இறந்தவர்களின் ஆடைகளை பயன்படுத்தலாமா?
இந்த உலகில் ஜீவராசிகளாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் மரணித்தே ஆக வேண்டும் என்பது நியதி. ஆனால் நம்முடனேயே வாழ்ந்தவர்கள் இறந்த பின்னர் அவர்களின் உடைகள் மற்றும் பொருட்களை என்ன செய்வது என்பதில் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. இந்த பொருட்கள் அவர்களின் நினைவுகளையும், ஆற்றல்களையும் தாங்கிக் கொண்டிருக்கும். அந்த உடைகளையும், பொருட்களையும் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் ஞாபகம் நமக்கு வந்து கொண்டே இருக்கும். இதற்கு ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ள சில பொதுவான கருத்துக்கள் குறித்து இங்கு காணலாம்.
ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது என்ன?
ஒருவர் இறந்த பின்னர் அவரின் ஆற்றல்களை அந்த உடைகள் தாங்கி இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆன்மீகம் கூறுகிறது. இதை நேரடியாக பயன்படுத்துவது உணர்வுபூர்வமாகவோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். முந்தைய காலங்களில் இறந்தவர்களின் உடமைகளை ஓர் ஆண்டு வரை வைத்து பூஜை செய்து அதை ஆற்றில் விடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த வழக்கத்தை பலரும் கடைபிடிப்பதில்லை. தற்போதைய காலத்தில் இறந்தவர்களின் உடைமைகளை பலரும் வைத்துக் கொள்வதையே விரும்புகின்றனர். உறவுகளின் நினைவாக இந்த உடைமைகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் ஆன்மீகத்தில் இவ்வாறு உடமைகளை வைத்திருக்க அறிவுறுத்தப்படுவதில்லை.
வஸ்திர தானம் செய்து விடலாம்
ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது படி இறந்தவர்களின் உடைகளை ஆற்றில் விடுவது அல்லது ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது போன்றவை கூறப்படுகிறது. சிலர் இறந்தவர்களின் ஆசைகள், நினைவுகள், உடைமைகள் என எதுவும் எஞ்சி இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் அவர்களது உடைகளை எரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஆத்மா உலக பந்தங்களில் இருந்து முழுதும் விடுபட்டு முழுமையாக மோட்சம் அடையும் என்று நம்புகின்றனர். சில சமூகங்களில் இறந்தவர்களின் உடல்களை அவர்கள் அடக்கம் செய்த இடத்திலேயே புதைத்தும் வழக்கம் உள்ளது. இறந்தவர்களின் சில உடைகள் அல்லது பொருட்களை அவர்களது நினைவாக பாதுகாத்து வைக்கும் வழக்கமும் உள்ளது. இது உணர்வுபூர்வமான பந்தங்களை வலுப்படுத்தும் என்பதால் இதை தவிர்ப்பவர்களும் உண்டு.
தேசமங்கையர்கரசி கூறும் விளக்கம்
இதுகுறித்து பல விவாதங்கள் எழுந்து வரும் நிலையில்நிலையில், பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி விளக்கங்களை அளித்துள்ளார். அதில் அவர், “இறந்தவர்களின் உடைமைகளை நாம் அவர்கள் நினைவாக வைத்திருப்பது சில சமயங்களில் நமக்கு வேதனையை ஏற்படுத்தலாம். அந்த உடைகளை பார்க்கும் பொழுது அவர்களது நினைவுகள் வந்து செல்லலாம். இதன் காரணமாகவே முந்தைய காலத்தில் அவர்களின் உடமைகளை ஆற்றில் விடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் அவர்களின் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக தாயின் புடவை, தந்தையின் வேஷ்டி, சட்டை ஆகிய ஏதாவது ஒரு பொருளை அவர்களை நினைவாக வைத்துக் கொள்ளலாம். உள்ளாடைகளை கண்டிப்பாக வைத்துக் கொள்ளக் கூடாது.
உள்ளாடைகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது
குறிப்பாக இறந்தவர்கள் பயன்படுத்திய பனியன்களை கிழித்து வீடு துடைக்க பயன்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது. அவர்களின் உள்ளாடைகள் புதியதாக இருந்தாலும் அதை களைந்து விடுவது நல்லது. உங்களிடம் இறந்தவர்களின் உடமைகள் அதிகமாக இருந்தால் அதை ஆடை இல்லாதவர்களுக்கு தானம் செய்து விடுங்கள். ஆறு, குளம் போன்ற பகுதிகளில் இருந்து அவற்றை மாசுபடுத்த வேண்டாம்” என்று தேச மங்கையர்க்கரசி கூறியுள்ளார். இறந்தவர்களின் பொருட்களை என்ன செய்வது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. எந்த வழியைப் பின்பற்றினாலும் அது உங்களுக்கு மன அமைதியை தர வேண்டும். முடிவெடுப்பதற்கு முன்னர் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டியது அவசியம். இறந்தவர்கள் உடைமைகளும், பொருட்களும் உணர்ப்பூர்வமானது. நினைவுகள் நிரம்பியது. எனவே அவற்றை கவனமாக கையாள வேண்டும்.