- Home
- Spiritual
- Kala Bhairava Jayanti: கால பைரவர் அவதரித்த திருநாள்.! பயங்கள், தோஷங்கள் தவிடு பொடியாக இப்படி வழிபடுங்கள்!
Kala Bhairava Jayanti: கால பைரவர் அவதரித்த திருநாள்.! பயங்கள், தோஷங்கள் தவிடு பொடியாக இப்படி வழிபடுங்கள்!
Kala Bhairava jayanti 2025: கால பைரவர் ஜெயந்தி என்பது சிவபெருமானின் உக்கிர வடிவமான கால பைரவர் அவதரித்த தினமாகும். இந்த தினம் குறித்தும் வழிபாடு மற்றும் பூஜை முறைகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கால பைரபவர் ஜெயந்தி 2025
பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 12, 2025 புதன்கிழமை மார்கழி கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தில் கால பைரவர் ஜெயந்தி துவங்குகிறது.
இந்த ஆண்டு நவம்பர் 11, 2025 11:08 மணிக்கு துவங்கி, நவம்பர் 12 இரவு 10:58 மணிக்கு முடிவடைகிறது. இந்த ஆண்டு நாள் முழுவதும் அஷ்டமி திதி நீடிப்பதால் நவம்பர் 12 புதன்கிழமை அன்று கால பைரவர் ஜெயந்தி கடைபிடிக்கப்படுகிறது.
பைரவர் ஜெயந்தியின் பலன்கள்:
சிவபெருமானின் அவதாரமான பைரவர் காலத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். இவர் காலத்தை கட்டுப்படுத்துபவராக அறியப்படுகிறார். இவரை வழிபடுவதால் காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீரும். மரணம் குறித்த பயங்கள் நீங்கும். வாழ்வில் ஏற்படும் தொடர் தடைகள் விலகும்.
பைரவர் காசி நகரின் (வாரணாசி) காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறார். அவர் அவதரித்த இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவது எதிர்மறை சக்திகளை வாழ்வில் இருந்து நீக்கும். கர்ம வினைகள், பாவங்கள் விலகும். வாழ்வில் பலம் உண்டாகும்.
விரத முறைகள்:
கால பைரவர் ஜெயந்தியில் அவரை விரதம் இருந்து வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். கால பைரவர் விரதம் இருப்பதற்கான உறுதியை (சங்கல்பம்) மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய நாள் முழுவதும் விரதம் இருந்து பைரவரை வழிபடலாம்.
விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள், துளசி தீர்த்தம் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒரு வேளை உணவை உட்கொள்ளலாம். வீட்டில் வழிபடுவதை விட ஆலயங்களில் வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
கோயில் வழிபாடு:
அருகிலுள்ள சிவாலயங்கள் அல்லது கால பைரவருக்கென தனி சந்நிதி உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும். கால பைரவர் சன்னிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு. குறிப்பாக தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷம்.
பைரவருக்கு மிகவும் பிடித்த செவ்வரளி பூக்களால் மாலை சாற்றி வழிபடலாம். இனிப்புகள், மிளகு கலந்த வடை, சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து அதை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு படைத்து வழிபடலாம்.
வீட்டில் வழிபடும் முறை:
வீட்டில் வழிபடுபவர்கள் கால பைரவரின் படம் அல்லது சிவபெருமானின் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து செவ்வரளி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். தயிர் சாதம், மிளகு வடை, பால் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். நாள்முழுவதும் கால பைரவர் மந்திரங்கள், பைரவர் ஸ்தோத்திரங்கள், சிவ அஷ்டகங்கள் போன்றவற்றை உச்சரிப்பது நன்மைகளைத் தரும்.
நாய் கால பைரவரின் வாகனமாக கருதப்படுவதால் கருப்பு நிற நாய்க்கு உணவளிப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இது பாவங்களை நீக்கி பைரவரின் அருளைப் பெற்றுத் தரும்.
கால பைரவர் அவதரித்த இந்த நாளில் விரதம் இருந்து மனதார வழிபடுபவர்களுக்கு வாழ்வில் ஏற்படும் தடைகள், மரணம் குறித்த பயம், கடன்கள் மற்றும் கஷ்டங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்வில் தைரியம், வெற்றிகள் மற்றும் செல்வ வளத்தைப் பெறுவீர்கள். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டு நீங்களும் கால பைரவரின் அருளை பரிபூரணமாக பெறுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)