நாளை சஷ்டி விரதம்! முருக பெருமானை வணங்கினால் வறுமை நீங்கும்.. இன்பம் பொங்கும்!!
Shasti viratham: சஷ்டி நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நமக்கு உடல் ஆரோக்கியமும், வறுமை நீங்கி செல்வங்களும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதி அன்று முருக பெருமானை வழிபட வேண்டும். ஏனென்றால் முருகப் பெருமானின் விரத தினமாக சஷ்டி திதியை தான் சொல்வார்கள். மே மாதத்தின் சஷ்டி திதி நாளை (மே.11) வியாழக்கிழமை வருகிறது. சஷ்டி என்றால் அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்ததாக வரக்கூடிய ஆறாம் நாள். அதிலும் வைகாசி மாத சஷ்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் விரதம் இருப்பதால், வீட்டில் அமைதி தங்கும். கஷ்டங்கள் நீங்கும்.
விரத முறை
சஷ்டி திதி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு முருகனை மனதார தியானம் செய்ய வேண்டும். அப்போது நாம் எதற்காக விரதம் இருக்க நினைக்கிறோமோ அந்த கோரிக்கையை முருகனிடம் வேண்டி கேட்க வேண்டும். மனமுருகி பிரார்த்தனை செய்துவிட்டு விரதத்தை தொடர வேண்டும். சஷ்டி விரதம் குழந்தை பாக்கியம் பெற்று தரும் வல்லமை வாய்ந்தது என்பது பெரியோர்கள் கூற்று. சஷ்டி விரதத்தால் குழந்தை வரம் மட்டுமில்லாமல், வறுமை நீங்கி குடும்பமும் முன்னேற்றம் காணும்.
எப்படி பிரார்த்தனை செய்வது?
சஷ்டி திதி நாளில் காலையில் எழுந்து நீராடிய பிறகு வீட்டை சுத்தம் செய்து பூஜைகளை தொடங்க வேண்டும். பூஜை அறையில் வீற்றிருக்கும் முருகன் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றி, தீப தூப ஆராதனை செய்து, பால் பழம் நைவேத்தியமாக வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: உங்க வீட்டுல பணமழை பொழியணுமா? இந்த ஒரு அதிசய மரத்தை மட்டும் நட்டு வெச்சு பாருங்க!
விரதம் கடைபிடிப்பவர்கள் காலையில் இருந்து ஏதும் சாப்பிடாமல் பூஜை அறையில் கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்க வேண்டும் அல்லது முருகனுடைய மற்ற மந்திரங்களை மனதார ஜெபிக்க வேண்டும். ஒருவேளை வேலை நிமித்தமாக இதை செய்ய முடியாதவர்கள் தங்கள் மனதிற்குள் 'ஓம் முருகா' என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.
சஷ்டி விரத பலன்கள்
குழந்தை பாக்கியம் கிடைக்க சஷ்டி விரதம் இருக்கலாம். வறுமை நீங்கி செல்வ செழிப்பை பெறவும் முருகப்பெருமானிடம் சரணடைந்து விரதம் இருக்கலாம். வேலைவாய்ப்புக்கும் சஷ்டி விரதம் பலன் கொடுக்கும்.
இதையும் படிங்க: நகங்களை அடிக்கடி கடிக்கும் பழக்கம் இருக்கா? அதனால் வரும் பாதிப்புகள் இவ்வளவு இருக்கு!