- Home
- Tamil Nadu News
- Puducherry
- என்ன கோபி இதெல்லாம்.. புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லையா.? விஜய்யின் பேச்சால் எழுந்த சர்ச்சை
என்ன கோபி இதெல்லாம்.. புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லையா.? விஜய்யின் பேச்சால் எழுந்த சர்ச்சை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், புதுச்சேரியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, திமுக மற்றும் ஒன்றிய அரசுகளை விமர்சித்தார். தவெக தலைவர் விஜயின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ரேஷன் கடை பற்றி விஜய்
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான சூழல் ஏற்கனவே அரசியல் ரீதியாக சூடுபிடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். மிகப்பெரிய திரளான மக்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டம், புதுச்சேரி அரசியல் மேடையில் புதிய உயிர் ஊட்டியது என்று கூறலாம்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தனது பேச்சை ஒன்றிய அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததன் மூலம் தொடங்கினார். அதன்பின், திமுக அரசை நோக்கி கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். திமுகவை நம்பி விட வேண்டாம் என்று புதுச்சேரி மக்களிடம் நேரடியாக கூறிய அவர், ஒன்றிய அரசு புதுச்சேரியை பல ஆண்டுகளாக புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் குறித்தும், முதல்வர் ரங்கசாமி குறித்தும் எந்தவிதமான விமர்சனமும் அவர் முன்வைக்காதது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் விஜய் பேச்சு
"தமிழ்நாடு ஒரு மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வகையில் ஒன்றிய அரசு பிரித்து பார்க்கலாம். ஆனால் நம்ம பார்வையில் அப்படி எந்த வித்தியாசமும் இல்லை," என்று விஜய் கூறினார். புதுச்சேரி அரசை பாராட்டியும் விஜய் பேசினார். “தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு செய்யாத பாதுகாப்பை, வேறு கட்சி கூட்டம் என்றாலும் கூட, புதுச்சேரி அரசு வழங்கியது. அதிகாரிகளுக்கும் எனது நன்றிகள்,” என அவர் தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மட்டுமல்ல, தொழில் வளர்ச்சியும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இல்லாத ஒரே பகுதி புதுச்சேரி என்றும் கூறினார். "மற்ற மாநிலங்களைப் போல இங்கும் ரேஷன் கடைகள் இயங்கி மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும்" என்று மக்களின் எதிர்பார்ப்பு பிரதிபலிக்கும் உரையாற்றினார்.
விஜய் ரேஷன் சர்ச்சை
உரையின் இறுதியில், புதுச்சேரி அரசியல் மேடையில் தமிழக வெற்றிக் கழக கொடியும் பறக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். “புதுச்சேரி மக்களே, நம்பிக்கை வையுங்கள்; வெற்றி நம்மிடம் தான் வரும்,” என தேர்தல் உறுதியை வெளிப்படுத்தினார். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மறுதிறப்பு தொடர்பான விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கு இலவச அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டது. பின்னர் ஆளுநராகப் பொறுப்பேற்ற கிரண்பேடி, சில நிர்வாக காரணங்களைச் சுட்டிக்காட்டி ரேஷன் கடைகள் இயங்குவதற்கு தடைவிதித்ததால், புதுச்சேரி முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதனால் நீண்ட காலமாக அரசு ஆதரவு பெறும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் பெற முடியாமல் போனது.
அரசியல் மாற்றத்தின்போது என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து, ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறினார். சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 21 அக்டோபர் 2024 அன்று குடிமைப்பொருள் வழங்கல் துறையின் ஏற்பாட்டில் புதுச்சேரி ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதன் மூலம், பல ஆண்டுகளாக நீடித்து வந்த ரேஷன் சேவை இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
புதுச்சேரி ரேஷன் கடை
தீபாவளிக்காக 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இந்த மறுதிறப்பு நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் நேரில் பங்கேற்றனர். ரேஷன் கடைகளுக்கான கதவுகளை திறந்து வைத்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் மூலம் நீண்ட நாட்களாக காத்திருந்த மக்களுக்கு முக்கிய நிவாரணம் கிடைத்தது.
அதே நேரத்தில், 2024-இல் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட விவரத்தை அறியாமல் விஜய் இப்படி தவறாக பேசியுள்ளாரே? இது கூட ஒரு கட்சியின் தலைவருக்கு தெரியாதா? என்ற கேள்வியையும் அரசியல் நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். தவெக தலைவர் விஜயின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

