- Home
- Tamil Nadu News
- Puducherry
- எதிர்பார்த்து காத்திருந்த முதல்வர்! அதெல்லாம் முடியாது! கையை விரித்த விஜய்! தொண்டர்கள் ஷாக்!
எதிர்பார்த்து காத்திருந்த முதல்வர்! அதெல்லாம் முடியாது! கையை விரித்த விஜய்! தொண்டர்கள் ஷாக்!
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் தவெக கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. அது குறித்து தவெக விளக்கம் அளித்துள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தவெக
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய்யின் தவெகவும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அண்மையில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி முடித்தது. இந்நிலையில், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
தவெக -என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி?
புதுவை சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க என்.ஆர்.காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. புதுச்சேரியில் விஜய்க்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் தவெகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம் என கருதி ரங்கசாமி இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் இதை மறுத்துள்ள தவெக புதுச்சேரியில் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
தவெக மறுப்பு
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
உண்மைக்கு புறம்பான தகவல்
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
விஜய் விரைவில் அறிவிப்பார்
இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் அவர்கள் விரைவில் அறிவிப்பார்.
விஜய் முடிவே இறுதியானது
தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது. எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறப்பட்டுள்ளது.