டெல்லி ஸ்கிரிப்ட்..! 50 தொகுதிகள்..! கூட்டணியில் விஜய்..! EPS கொடுக்கும் சர்ப்ரைஸ்..!
எப்படியோ என்.டி.ஏ கூட்டணியுடன் தவெக நெருங்கிக் கொண்டு இருக்கிறது. முழுமையாக தவெகவை கூட்டணி சேர்த்து விட வேண்டும் என்பதை மனதில் வைத்தே குமாரபாளையத்தில் கூட்டணிக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது என அடித்துச் சொல்லி இருக்கிறார் இபிஎஸ்

டெல்லி எழுதும் ஸ்கிரிப்ட்
என்டிஏ கூட்டணியில் தவெக.. இதுதான் டெல்லி எழுதும் ஸ்கிரிப்ட்டாக இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் அதை சக்சஸ் ஆக்கும் அசைன்மென்ட் கூடுதலாக எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஆதரவாக நடந்து கொண்டு விஜயிடம் பதிவு செய்து வருகிறார்கள் பாஜகவினர். தொடக்கத்திலேயே பாஜகவின் ஹேமா மாலினி தலைமையிலான ஒரு குழு வந்து விசாரித்து விட்டு தமிழ்நாடு அரசாங்கம்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக விஜய் உடனே கரூருக்கு சென்றால் உயிருக்கு ஆபத்துகள் வரலாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். அதாவது இந்த விவகராத்தில் திமுக ஆட்சியின் மீது நிறைய கேள்விகளை முன் வைத்து வருகிறது பாஜக. எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசு மீது சந்தேகம் கிளப்பி வருகிறார்.
போலீஸ் மீது சந்தேகம் உள்ளபோது அவர்களே இதை விசாரித்தால் எப்படி சரியாக இருக்கும்? அதனால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான உண்மை வெளியில் வரும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி பேசி வருகிறார். அதிமுகவின் தர்மபுரி கூட்டத்திலும் தவெக கொடி பறந்தது. சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி கூட்டங்களில் தவெக கொடிகளே பறந்து கொண்டு இருந்தது. இவை எல்லாவற்றின் நோக்கமும் விஜய்க்கு சாதகமாகப்பேசி அதன் மூலம் அவரை என்.டி.ஏ கூட்டணிக்கு உள்ளே கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற ஒற்றை குறி மட்டுமே
காய் நகர்த்தும் எடப்பாடி பழனிச்சாமி
இப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் பல திட்டங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணி இருக்கிறது. தொகுதி பங்கீடாக பாஜகவை 80 தொகுதி வரை கேட்கிறார்கள். அதில் 50 தொகுதிகளாவது கட்டாயம் பெற வேண்டும் என நினைக்கிறது பாஜக. ஆனால், கடந்த முறையைப்போல 20 தொகுதிகளோடு பாஜகவை சுருக்கி விட வேண்டும் என நினைக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. அதிமுகவின் வலுவான கோட்டையான கோவையை பாஜகவினரும் குறி வைக்கிறார்கள். ஆனால் அதிக தொகுதிகளை அவர்கள் கேட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவே கூட்டணிக்குள் இருந்த போதும் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இப்போது தவெக கூட்டணிக்குள் வந்தால் அதிமுக- பாஜக -தவெக என 3 மெகா கட்சிகள். அப்படியானால் தொகுதி பங்கீடு எப்படி இருந்தால் சரியாக இருக்கும் என அதிமுக சீனியர்கள் ஆலோசனை செய்திருக்கிறார்கள். பாஜகவும் கணிசமாக தொகுதிகளை கேட்கிறது. தவெகவும் கூட்டணிக்கு வந்தால் நிச்சயமாக கணிசமான தொகுதிகளை கேட்கலாம். தொடக்கத்திலேயே அதிமுக, தவெக கூட்டணி வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதனால் தான் இப்போது வரையிலும் கூட இரண்டு கட்சியுமே நேரடியாக அட்டாக் செய்து கொள்ளவில்லை. கரூர் சம்பவத்துக்கு முன்பு வரை கூட தவெகவை அதிமுக விமர்சிக்கவில்லை.
134 தொகுதிகளில் மட்டுமே அதிமுக?
தவெகவும் அதிமுகவை மேலோட்டமாகவே விமர்சித்தது. பாஜக கூட்டணிக்கு முன்பே தவெக, அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் 40 தொகுதிகளுக்குள் தவெகவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என அதிமுக சீனியர்கள் நினைத்தார்கள். ஆனால், ‘‘ என்னுடைய பலமே உங்களுக்கு புரியவில்லை. எங்களை சாதரணமாக எடை போட்டு விட்டீர்கள்’’ என தவெக அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் அப்போதே அந்த கூட்டணிக் கணக்கு டேலி ஆகவில்லை. இப்போது சூழல் நிறைய மாறி இருக்கிறது. டெல்லியும் தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறது.
முன்பு கேட்டத்தை விட, இப்போது கொஞ்சம் கூடுதலாக தவெகவுக்கு தொகுதிகளை ஒதுக்கலாம். அப்படி அவர்களுக்கு கூடுதலாக ஒதுக்கினால் பாஜகவுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அதை பாஜக எந்த அளவுக்கு ஒற்றுக்கொள்ளும் என தெரியவில்லை. பாஜக, தவெக இரு கட்சிகளுமே தலா 80 தொகுதிகள் வேண்டும். குறைந்தது தலா 50 தொகுதிகள் வேண்டும் என்று இரு கட்சிகளும் கேட்டால் மீதி இருக்கக்கூடிய வெறும் 134 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடும்.
எப்போதுமே அதிமுக வரலாற்றில் எதிர்ப்புகள் அதிகமாக இருந்தாலும் சரி, ஆதரவுகள் அதிகமாக இருந்தாலும் சரி. ஜெயலலிதாவின் மாடல் என்றாலே அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது தான். இன்னும் மக்கள் மத்தியில் செல்வாக்க இருக்கக்கூடிய ஒரு கட்சி. கடந்த கால வரலாறு இப்படி இருக்க, சரிபாதி தொகுதிகளாக எடப்பாடி பழனிச்சாமி பிரித்துக் கொடுக்க முன்வர மாட்டார். இது போன்ற சில நெருக்கடிகளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்து கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாகவும் சில ஆலோசனைகள் அதிமுகவில் ஓடிக்கொண்டிருக்கிறது.
முன்பு தேர்தல் நெருங்கும் போது கூட காட்சிகள் மாறி இருக்கிறது. தொகுதி பங்கீடு காரணமாக இருதரப்பிற்கும் ஒத்துப் போகாமல் கூட்டணியை முறித்துக் கொண்டு சென்ற கட்சிகளும் உள்ளன. அப்படி இறுதி கட்டத்தில் சூழல் மாறி அதிமுக-தவெக மட்டுமே கூட்டணி அமைந்தால் அப்போது தவெகவுக்கு கூடுதல் தொகுதிகளையும் வழங்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக கூட்டணியை விட்டுப் போவதற்கு அதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் பவன் கல்யாணாகும் விஜய்..?
மூன்று கட்சிக் கூட்டணி என்பதை நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது. ஆந்திராவில் துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு சந்திரபாபு நாயுடு 21 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினார். இப்போது 21 எம்எல்ஏக்கள் பவன் கல்யாணிடம் இருக்கிறார்கள். அந்த வெற்றிதான் அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்திருக்கிறது. ஆகையால் குறைந்த தொகுதிகளில் ஒப்புக்கொள்ள வைத்து இன்னொரு பக்கம் சில கூடுதல் அதிகாரங்களை விஜயிடம் கொடுக்கலாம் என சில விஷயங்களை ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்டிஏ கூட்டணியில் இருக்கக்கூடிய டெல்லியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பீகார் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழகத்தில் சில முடிவுகள் இறுதியாக எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ என்.டி.ஏ கூட்டணியுடன் தவெக நெருங்கிக் கொண்டு இருக்கிறது. முழுமையாக தவெகவை கூட்டணி சேர்த்து விட வேண்டும் என்பதை மனதில் வைத்தே நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையத்தில் கூட்டணிக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது என அடித்துச் சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அவரோடு நெருக்கமாக பயணிக்க கூடிய ரத்தத்தின் ரத்தங்கள்.