- Home
- Politics
- திராவிட நெருப்புதான் டெல்லி வரை எரிகிறது: இந்தியாவில் திமுகதான் எதிர்கட்சி..! உக்கிரமான உதயநிதி..!
திராவிட நெருப்புதான் டெல்லி வரை எரிகிறது: இந்தியாவில் திமுகதான் எதிர்கட்சி..! உக்கிரமான உதயநிதி..!
இந்தியாவின் தென்கோடியில் இருக்கக்கூடிய தமிழகத்தில் இருந்து நாம் பற்ற வைக்கக்கூடிய திராவிட சூடு, இன்றைக்கு ஒட்டுமொத்த நாட்டையும், டெல்லியையும் ஆட வைத்துள்ளது. அதனால்தான் திமுகவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பாஜக பல திட்டங்களை தீட்டி வருகிறது.

‘‘புதிய கட்சி தொடங்கியோருக்கு வரலாறு இல்லை. திமுகவின் ஒவ்வொரு தொண்டனுக்கும் வரலாறு உள்ளது. 2026 தேதலில் திமுக வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சி அமைக்கும்’’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக தனது கவனத்தை தமிழக தேர்தலில் செலுத்த திட்டமிட்டுள்ளது. பீகார் தேர்தலில் பாஜகவின் அபார வெற்றி தமிழகத்திலும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பாஜகவின் வெற்றியையும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்தித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘ ‘திராவிட இயக்கத்தை வளர்ப்பதற்காக நாம் இந்த அளவுக்கு உழைத்துக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொருத்தரும் பாடுபட்டு இருக்கிறோம். திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாத எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவோடு சேர்ந்துகொண்டு திராவிட இயக்கத்தை அழிக்கின்ற வேலையில ஈடுபட்டிருக்கிறார். திமுக என்பது போராட்டத்தாலும், தியாகத்தாலும் உருவான இயக்கம். இன்றைக்கு தமிழ்நாட்டில்தான் திராவிட முன்னேற்ற கழகம் ஆளுங்கட்சி. டெல்லியில் திராவிட முன்னேற்ற கழகம்தான் முக்கியமான எதிர்கட்சி. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டில் அது ஒரு அடிமை கட்சி. நாம் இப்படி கொள்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் கொள்கையற்ற கூட்டமாக, வன்மத்தை, அவதூறுகளை பரப்புகிற கூட்டமாக இன்று ஒரு கூட்டம் உருவாகி விட்டது.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை, திமுகவுடைய கொள்கைகளை இன்றைக்கு நாடு முழுவதும் பரவியதை பார்த்த பாசிச பாஜக கூட்டத்திற்கும், அடிமை பாஜக கூட்டத்திற்கும் நிலை புரண்டு போய் உள்ளனர். சுடு தண்ணீர் வைக்கும்போது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு தட்டு வைத்து மூடி கீழே இருக்கிற நெருப்பினால் சூடேறி பாத்திரத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது பாத்திரத்தை மூடியக்கூடிய மேலே இருக்கிற தட்டு மெதுவாக ஆட ஆரம்பிக்கும். அதுபோல இன்றைக்கு இந்தியாவின் தென்கோடியில் இருக்கக்கூடிய தமிழகத்தில் இருந்து நாம் பற்ற வைக்கக்கூடிய அந்த திராவிட சூடு, இன்றைக்கு ஒட்டுமொத்த நாட்டையும், டெல்லியையும் ஆட வைத்துள்ளது. அதனால்தான் திமுகவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது.
அந்த சூழ்ச்சியின் ஒரு பகுதி தான் இப்போது நடக்கின்ற எஸ்.ஐ.ஆர் என்கிற திட்டம். திமுகவுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய வாக்குகளை எல்லாம் எப்படியாவது முடக்க வேண்டும், நீக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மை மக்கள், பெண்கள், ஒதுக்கப்பட்ட மக்களுடைய வாக்குகளை எல்லாம் நீக்க வேண்டும். இதுதான் அவர்களை ஒரே நோக்கம். இந்த சூழ்ச்சியை முறியடிக்கின்ற வகையில் நீங்கள் அத்தனை பேரும் உங்களுடைய வாக்குச்சாவடியில் உங்களுடைய வாக்குகளை முதலில் நீங்கள் சரி செய்ய வேண்டும். மிகுந்த கவனத்தை கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். 2026 நமது கழக கூட்டணி மீண்டும் வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம்.
நமது கழகம் ஏழாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும். நம்முடைய தலைவர் கடந்து இரண்டாவது முறையாக நிச்சயமாக முதல்வர் நாற்காலியில் உட்காருவார். தமிழ்நாட்டு மக்கள் உட்கார வைப்பார்கள். இந்த வெற்றியை உறுதியாக கிடைக்கும். அதற்காக அடுத்த நான்கு மாதங்களும் நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.