காங்கிரஸ்காரர்கள் சோர்வடைய வேண்டாம். ஜனநாயகத்தை காக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்று பீகார் தேர்தல் தோல்வி குறித்து மல்லிகார்ஜூன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. அதுவும் காங்கிரஸ் கட்சி தனியாக 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் காங்கிரஸ் தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.
ராகுல் காந்தியிடம் சரியான திட்டம் இல்லையா?
என்னதான் தோல்விக்கு வாக்குத் திருட்டை காங்கிரஸ் காரணமாக சொன்னாலும், பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல் காந்தியிடம் சரியான திட்டம் இல்லையோ? என்ற சந்தேகம் காங்கிரஸ் தொண்டர்கள் மனதில் உதிக்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம். இனிமேல் நமது போராட்டம் வலுவடையும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
போராட்டத்தைத் தொடருவோம்
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பீகார் மக்களின் முடிவை மதிக்கிறோம். அரசியல் சாசன அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைத் தொடருவோம். தேர்தல் முடிவுகளை ஆழமாக ஆராய்ந்து, இந்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்து கொண்ட பிறகு ஒரு விரிவான அறிக்கையை வழங்குவோம்.
சோர்வடையத் தேவையில்லை
மகா கூட்டணியை ஆதரித்த பீகார் வாக்காளர்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் நான் சொல்ல விரும்புவது: நீங்கள் சோர்வடையத் தேவையில்லை. நீங்கள் எங்கள் பெருமையும் மரியாதையும் ஆவீர்கள். உங்கள் கடின உழைப்பு எங்கள் பலம்.
ஜனநாயகத்தை காக்க வேண்டும்
பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் எதையும் விட்டு வைக்க மாட்டோம். மக்களிடையே இருந்து கொண்டே அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காக்க எங்கள் போராட்டத்தைத் தொடருவோம். இந்தப் போராட்டம் ஒரு நீண்ட போராட்டம். மேலும் அதை முழுமையான அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் உண்மையுடன் போராடுவோம்'' என்று கூறியுள்ளார்.
