- Home
- இந்தியா
- Maithili Thakur: 25 வயதில் எம்.எல்.ஏ..! நாட்டுப்புற பாடகி டூ அரசியல்வாதி..! யார் இந்த மைதிலி தாக்கூர்?
Maithili Thakur: 25 வயதில் எம்.எல்.ஏ..! நாட்டுப்புற பாடகி டூ அரசியல்வாதி..! யார் இந்த மைதிலி தாக்கூர்?
Maithili Thakur: பீகார் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி பெற உள்ளார். இவர் யார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிகை
பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிகை நடந்து வரும் நிலையில் பாஜக, ஜேடியு அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 208 தொகுதிகளில் முன்னிலை பெற்று பிரம்மாண்ட வெற்றியை நோக்கி செல்கிறது. காங்கிரஸ், ஆர்ஜேடி அடங்கிய மகாபந்தன் கூட்டணி படுதோல்வியை தழுவியுள்ளது. பீகாரின் அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில் 25 வயதான நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வேட்பாளராக களம் கண்டார். அவரை எதிர்த்து ஆர்ஜேடி வேட்பாளர் பினோத் மிஸ்ரா களமிறங்கினார்.
வெற்றியின் விளிம்பில் மைதிலி தாக்கூர்
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அலிநகர் தொகுதியில் மைதிலி தாக்கூர் முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை 18 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், 63,236 வாக்குகளை பெற்றுள்ள மைதிலி தாக்கூர், பினோத் மிஸ்ராவை (57,660) விட 6,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளார். இன்னும் 6 சுற்றுகளே பாக்கி இருக்கும் நிலையில், மைதிலி தாக்கூர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆக பதவியேற்பது உறுதியாகி விட்டது.
யார் இந்த மைதிலி தாக்கூர்?
பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தில் உள்ள பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மைதிலி தாக்கூர். அவரது தந்தை ரமேஷ் தாக்கூர் அவரது தாயார் பாரதி தாக்கூர். தந்தை ஒரு இசை ஆசிரியர் என்பதால் மைதிலி குழந்தையாக இருக்கும்போதே பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார்.
ரைசிங் ஸ்டார் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவருக்கு நாடு தழுவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. மைதிலியின் பஜனைகள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் சூஃபி பாடல்கள் இந்தியாவில் மட்டுமல்ல நேபாளம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளிலும் பிரபலமாக உள்ளன.
இசை மீது தீராத காதல்
மைதிலி தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை தனது கிராமத்தில் முடித்தார், பின்னர், அவரது முழு குடும்பமும் டெல்லிக்கு குடிபெயர்ந்தது, அங்கு அவர் தனது 12 ஆம் வகுப்பு வரை பால் பவன் சர்வதேச பள்ளியில் பயின்றார். பின்னர் அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் பட்டம் பெற்றார்.
ஒருபக்கம் படிப்பிலும் மறுபக்கம் இசை மீதும் தீவிர கவனம் செலுத்திய மைதிலி தனது இசைத்திறமையை வளர்த்துக் கொண்டு இப்போது தனியாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். போஜ்புரி மற்றும் இந்தி பாடல்களிலும் பணியாற்றுகிறார்.
இளம் வயது எம்.எல்.ஏ என்ற பெருமை
மைதிலி தாக்கூர் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த மாதம் 14ம் தேதி தான் பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்தில் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் புகழை மனதில் வைத்து தேர்தலில் போட்டியிட பாஜக அவருக்கு சீட் கொடுத்தது. இப்போது வெற்றியின் நுனியில் இருக்கும் மைதிலி தாக்கூர் இளம் வயது எம்.எல்.ஏ என்ற பெருமையை பெற உள்ளார்.