சமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளது..! பிரதமர் மோடி பெருமிதம்..! நிதிஷ்குமாருக்கு புகழாரம்!
Bihar Election 2025: சமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளதாக பீகார் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார், சிராக் பாஸ்வான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை அவர் வாழ்த்தியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி மெகா வெற்றி
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இப்போது வரை பாஜக, ஜேடியு கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 92 இடங்களிலும், ஜேடியு 84 இடங்களிலும், எல்ஜேபி 19 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதே வேளையில் காங்கிரஸ், ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணி 33 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
சமூக நீதி வென்றுள்ளது
இந்த நிலையில், பீகார் தேர்தல் வெற்றியின் மூலம் சமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் நல உணர்வு வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது. 2025 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஈடு இணையற்ற வெற்றியை அளித்ததற்காக பீகார் மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.
எங்களுக்கு புதிய பலம்
இந்தத் தீர்ப்பு மக்களுக்குச் சேவை செய்வதற்கும் பீகாருக்காகப் பணியாற்றுவதற்கும் எங்களுக்குப் புதிய பலத்தைத் தந்துள்ளது. வரவிருக்கும் காலங்களில் பீகாரின் முன்னேற்றத்திற்காகவும், அதன் உள்கட்டமைப்புக்காகவும், பீகாரின் கலாச்சாரத்திற்காகவும் இன்னும் அதிகமாகப் பாடுபடுவோம். மாநிலத்தின் இளைஞர் சக்தி, மற்றும் பெண் சக்தி வளமான வாழ்க்கையை நடத்துவதற்கான பல வாய்ப்புகள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
நிதிஷ்குமார், சிராக் பாஸ்வானுக்கு வாழ்த்து
தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்திற்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியுள்ளது. எங்களுடைய செயல்பாட்டுகளின் அடிப்படையிலும், மாநிலத்தை மேலும் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையிலும் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.
இந்த இணையற்ற வெற்றிக்காக முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த எங்கள் கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.