- Home
- Politics
- காட்டுமிராண்டி பவுன்சர்கள்..! நொறுங்கிப் போன மனிதநேயம்.. விஜய் மாநாட்டில் நடந்த அவலம்..!
காட்டுமிராண்டி பவுன்சர்கள்..! நொறுங்கிப் போன மனிதநேயம்.. விஜய் மாநாட்டில் நடந்த அவலம்..!
இதில் துடிதுடித்துப்போன அந்த ரசிகர் காலில் முறிவு ஏற்பட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து செல்ல முடியாமல் வேதனையில் அழுது கதறியபடி தரையில் புரண்டு தவித்தார். அப்போது அவரை யாரும் கண்டுகொள்ளவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை.

மதுரை மாவட்டம், பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் 3500 போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பவுன்சர்கள் மாநாட்டு திடலுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெண்களை கண்காணிப்பதற்கென 500 பெண் பவுன்சர்களும் களத்தில் இறக்கப்பட்டனர்.
இதுவரை எந்தக் கட்சி மாநாட்டிலும் பெண்களை கண்காணிக்க தனியாக பவுன்சர்களை ஈடுபடுத்தியதில்லை. விஜய் மட்டுமே மதுரை மாநாட்டில் இந்த பெண் பவுன்சர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபத்தினர்.
மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பிய நிலையில் “உங்கள் விஜய்.... நான் வரேன்... ” என்ற பாடலுடன் மேடைக்கு வந்த விஜய் அவரது பெற்றோர் மற்றும் நிர்வாகிகளிடம் வாழ்த்துகளை பெற்று கொண்டு தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது விஜயை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்கள் யாரும் ஏறிவிடக்கூடாது என இரும்புக்கம்பிகளில் கிரீஸ் தடவி இருந்தனர் விழா ஏற்பாட்டாளர்கள். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் விஜய் ராம்ப்வாக் வந்தபோது அவரது ரசிகர்கள் பவுன்சர்ஸ்களையும் தாண்டி மேடையில் ஏறிக் குதித்து விஜய் அருகே நெருங்கி வந்தனர்.
அவர்களை பவுன்சர்கள் குட்டுக் கட்டாக தடுத்து நிறுத்தி தூக்கி எறிந்தனர். அப்போது ஒரு ரசிகர் கீழிருந்து ராம்ப்வாக் மேடையில் ஏறியபோது பவுன்சர் ஒருவர் அவரை அலேக்காகத்தூக்கி தரையில் எறிந்தார். இதில் துடிதுடித்துப்போன அந்த ரசிகர் காலில் முறிவு ஏற்பட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து செல்ல முடியாமல் வேதனையில் அழுது கதறியபடி தரையில் புரண்டு தவித்தார். அப்போது அவரை யாரும் கண்டுகொள்ளவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை. விஜய் பேசிக்கொண்டிருந்ததை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
விஜயின் பவுன்சர்கள் அடாவடித்தனமாக நடந்துகொள்வது இது முதன்முறையல்ல. கல்வி விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை விழா என பல இடங்களில் ரசிகர்களையும், தொண்டர்களையும், பத்திரிக்கையாளர்களையும் தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. இது விஜய் மீதான பிம்பத்திற்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
விஜய்யின் பாதுகாப்புற்கு வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்தின் பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். துபாயை தலைமையிடமாக கொண்ட ஜென்டர் செக்யூரிட்டீஸ் நிறுவனம் சார்பில் தவெகவின் விழாக்களுக்கு பவுன்சர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் உலக பிரபலங்களான டாம் குரூஸ், சல்மான் கான், அமிதாப் பச்சன், சச்சின், கபில்தேவ் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன. நடிகர் விஜய்க்கு இந்த நிறுவனம் முதல் முறை பாதுகாப்பு வழங்கவில்லை. ஏற்கனவே நடிகர் விஜய் நடத்திய கல்வி விருது, விக்கிரவாண்டி மாநாடு, கட்சி அறிமுக விழா போன்ற நிகழ்ச்சிகளில், அவருக்கு பாதுகாப்பு வழங்கி உள்ளனா்.