- Home
- Politics
- மாமல்லபுரம் சந்திப்பு: பாவம், விஜய் பைத்தியக்காரன் மாதிரி ஆகிட்டாரு..! பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!
மாமல்லபுரம் சந்திப்பு: பாவம், விஜய் பைத்தியக்காரன் மாதிரி ஆகிட்டாரு..! பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!
நாங்கள் இங்கிருந்து போய் பார்க்க வேண்டும் என்று அவசியமே கிடையாது. நீ யாருடா போடா என்று வீட்டில் படுத்து இருக்கலாம். ஒரு மனிதாபிமான அடிப்படையில் நம்மளை அங்கிருந்து கூப்பிட்டு இருக்கிறார்கள். நிச்சயமாக போகலாம். போய் பார்த்துவிட்டு வரலாம்.

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேற்று மாமல்லபுரடததில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தவெக தலைவர் விஜய். அங்கு நடந்த சம்பவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர்.
‘‘நாங்கள் விஜயைப் பார்த்தவுடன் எங்களுக்கு அழுகை வந்துவிட்டது. அவரை நேரில் பார்த்தவுடன் ஒரு மாதிரி ஆகிவிட்டோம். சினிமாவில் அவரை பார்க்கும்போது அவர் திடமாக இருந்தார். இப்போது பார்க்கும்போது ஆளே ஒரு மாதிரியாக, முடியெல்லாம் வெட்டாமல் ஒரு மாதிரி இருந்தார். அவர் கரூருக்கு வராததற்கு போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என்று சொன்னார். அனுமதி கிடைத்திருந்தால் கண்டிப்பாக கரூர் வந்து உங்கள் வீட்டில் வந்து பார்த்திருப்பேன். இப்படி உங்களை வரச் சொல்லி இருக்க மாட்டேன் என்று விஜய் சொன்னார்.
போலீஸ் பாதுகாப்புக்காக எவ்வளவு முயற்சி செய்தோம். போலீஸ் அனுமதி கிடைக்காததால்தான் நாங்கள் சென்னைக்கு உங்களை அழைத்தோம் என்று சொன்னார். எங்களுக்கு யார் மீதும், எந்த வருத்தமும் இல்லை. எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் யார் மீதும் வருத்தமில்லை. அந்த கூட்டத்திற்கு போனது எங்கள் தப்பு. டிவியில் பார்த்திருந்தால் எங்களுக்கு இந்த இழப்பு இருந்திருக்காது. எந்த கட்சி மீட்டிங்கிற்கும் நாங்கள் இதுவரை போனதில்லை. இந்த கூட்டத்திற்கு விஜயை பார்க்கத்தான் போனோம்.
இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம். இதில் நாங்கள் எந்த கட்சியையும் குற்றம் சொல்லி பலன் இல்லை. எதுவும் நடக்கப்போவதில்லை. யார் மீதும் எங்களுக்கு கோபமோ, வருத்தமோ கிடையாது. எங்களுக்கு எங்கள் மீது தான் கோபம். அன்னைக்கு நாங்கள் பிள்ளைகளை கூட்டிப் போகாமல் இருந்தால் அவர்கள் இப்போது உயிரோடு இருந்திருப்பார்கள். இனிமேல் மக்கள் சந்திப்பை நடத்தினால் ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக மாநாடு மாதிரி போட்டாலே சரியாக இருக்கும். எங்கள் ஊரில் ஒரு யானை வந்தாலே நின்று பார்ப்பார்கள். எவ்வளவு பெரிய நடிகர் வந்தால் நாங்கள் எப்படி பார்க்காமல் இருக்க முடியும்?
எங்களுக்கு இன்சூரன்ஸ் போட்டுக் கொடுத்திருக்கிறார். வேலை, கல்வி விஷயமாக உதவி செய்வதாக கூறி இருக்கிறார்கள். எங்கள் பேருந்துக்கு முன்னால் நான்கு கார்கள் பின்னால் நான்கு கார்கள் என அவ்வளவு பந்தோபஸ்தோடு கூட்டிப் போனார்கள். விஜய் இங்கே வந்திருந்தால்கூட இவ்வளவு செலவாகி இருக்காது. இவ்வளவு கஷ்டம் அவருக்கு இருந்திருக்காது. ஆனால் எங்களுக்காக அவ்வளவு செலவு செய்திருக்கிறார். எங்கள் குடும்பத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு எட்டு பேர் சென்று இருந்தோம். அவர் மட்டும்தான் அந்த விடுதியில் உள்ளே இருந்தார். ஒரு கேமராவோ, வீடியோவோ எடுக்கவில்லை. அவர் செல்லை கூட கமிட்டியினர்தான் வைத்திருந்தார்கள்.
அவர் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர் சொந்த காசுல இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று அவசியமே கிடையாது. இன்றைக்கு நாம் எத்தனையோ இழப்பை பார்த்து விட்டோம். சாராயம் குடித்தவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுத்தார்களோ கொடுக்கவில்லையோ அதெல்லாம் தெரியாது. அன்றைக்கு அவர்களை எல்லாம் யாரும் போய் பார்க்கவில்லை. ஒரு பொன்மாலை போர்த்தினால் கூட வீடியோக்காரர்களை அழைத்துதான் பொன் மாலை போடுகிறார்கள். ஆனால், விஜய் இன்றைக்கு இவ்வளவு எங்களுக்கு செய்திருக்கிறார். செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
அவர்களை பார்க்க போக வேண்டும் என்று எங்களுக்கும் அவசியம் கிடையாது. மனிதாபிமானத்தில் விஜய் கூப்பிட்டார். நாங்களும் மனிதாபிமானத்தில் தான் போனோம். அவர் காசு கொடுப்பதற்காகவோ அல்லது இவர்கள் காசு கொடுப்பார்கள் என்று நாங்கள் போகவில்லை . அவரால் இங்கு வர முடியவில்லை. அவர் மீண்டும் வந்து இங்கே மக்கள் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தான் நாங்கள் போனோம். நாங்கள் போனவுடன் மன்னித்து விடுங்கள் என்றுதான் விஜய் கேட்டார். உங்களை வரவைத்தது என்னுடைய தவறு என்று கூறிக் கொண்டே காலில் விழுந்தார். எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக போய்விட்டது. ரொம்ப இளைத்துவிட்டார்.
முதலில் இருந்த விஜய்க்கும், நேற்று பார்த்த விஜய்க்கும் சம்பந்தமே கிடையாது. என்னமோ பாவம் நடந்ததை எண்ணி பைத்தியக்காரன் மாதிரி ஆகிவிட்டார். நாங்கள் இங்கிருந்து போய் பார்க்க வேண்டும் என்று அவசியமே கிடையாது. நீ யாருடா போடா என்று வீட்டில் படுத்து இருக்கலாம். ஒரு மனிதாபிமான அடிப்படையில் நம்மளை அங்கிருந்து கூப்பிட்டு இருக்கிறார்கள். நிச்சயமாக போகலாம். போய் பார்த்துவிட்டு வரலாம். ஒன்றும் வேண்டாம் புறப்படுங்கள் என்று சொல்லிவிட்டு நாங்கள் எல்லோரும் போனோம். போய் பார்த்தோம், இருந்தோம். என்ன செய்து என்ன செய்வது? கோடி கோடியாக பணம் கொடுத்தாலும் எங்கள் பிள்ளைகள் திரும்ப வருவார்களா? அது எங்கள் பிள்ளைகளுக்கு ஈடாகுமா?’’ என கண்கலங்குகின்றனர்.