இர்பான், மாதம்பட்டி..! திமுக ஆட்சியில் எளிதாக தப்பித்துக் கொள்ளும் யூட்யூப் பிரபலங்கள்
இர்ஃபானுக்கு திமுகவில் செல்வாக்கு இருக்கிறது. இர்ஃபானும், மாதம்பட்டி ரங்கராஜும் நல்ல நண்பர்கள். ஆகவே தன்னைப்போலவே திமுகவின் சோர்ஸை வைத்து இர்ஃபான் மாதம்பட்டி ரங்கராஜையும் காப்பாற்றி வருகிறார் என்கிற தகவலும் றெக்கைகட்டி பறக்கிறது.

திமுக ஆட்சியில் தப்பிக்கும் யூடியூப் பிரபலங்கள்
காவல்துறை, திமுக தலைவர்களை விமர்சிக்கும் யூட்யூபர்கள் மீது உடனே பாய்ந்து கைது செய்யும் திமுக ஆட்சியில் சட்டத்துக்கு விரோதமாக புகார் அளிக்கப்பட்டும் இர்ஃபான், மாதம்பட்டி ரங்கராஜ் போன்ற சில யூடியூப் எளிதாக தப்பித்துக் கொள்வதாக சர்ச்சைகள் எழுகின்றன.
யூடியூபர் இர்ஃபான் கடந்த 18 மாதங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இர்ஃபான் தனது மனைவி ஆலியாவுடன் துபாயில் கருவின் பாலின பரிசோதனை செய்து, அதை "Boy or Girl Baby? Gender Test" என்ற தலைப்பில் வீடியோவாகப் பதிவேற்றினார். இந்தியாவில் கருவின் பாலினத்தை வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், தமிழ்நாடு சுகாதாரத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. வீடியோவை அகற்றுமாறு உத்தரவிட்டது. இர்ஃபான் மன்னிப்பு கோரி வீடியோவை அகற்றினார். சுகாதாரத்துறை அவரது மன்னிப்பை ஏற்று, சட்ட நடவடிக்கையை தவிர்த்தது.
திமுக தயவால் தப்பிக்கும் இர்ஃபான்
இர்ஃபான் தனது மனைவியின் பிரசவத்தின் போது, சோளிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் தொப்புள்கொடியை வெட்டுவது உள்ளிட்ட காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து, "Irfan's View" யூடியூப் சேனலில் பதிவேற்றினார். ஆனால், அறுவை சிகிச்சை அறையில் கேமராவுடன் நுழைவது, மருத்துவர் இல்லாதவர் தொப்புள்கொடியை வெட்டுவது தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2021ன்படி விதிமீறல். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது.
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இர்ஃபான் மற்றும் மருத்துவமனை மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மருத்துவமனையின் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 10 நாட்களுக்கு பதிவு ரத்து செய்யப்பட்டு, ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மருத்துவருக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.
ஆனால் இர்ஃபான் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இர்ஃபான் வீடியோவை நீக்கி, மன்னிப்பு கடிதம் கொடுத்து ஜாலியாக அடுத்த வீடியோவுக்கு தயாராகி விட்டார்.
சில் வண்டு சிக்காது
இர்ஃபான் ஹெல்மெட் இல்லாமல் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்ற பழைய வீடியோ ஒன்று வைரலானது. இதனால், சென்னை போக்குவரத்து காவல் துறை அவருக்கு ஹெல்மெட் இல்லாமல் சென்றதற்கு ₹1,000 மற்றும் நம்பர் பிளேட் சரியாக இல்லாத காரணத்துக்காக ₹500 அபராதம் விதித்தது. இர்ஃபான் அபராதத்தை செலுத்தி தப்பினார்.
2023-ல், இர்ஃபானின் கார் சென்னை பொத்தேரி அருகே ஜிஎஸ்டி ரோட்டில் 55 வயது பெண்ணை மோதி மரணமடையச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிலர் இர்ஃபான் இதை தனது மைத்துனர் மீது பழி போட்டு தப்பித்ததாக கூறினர். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ வழக்கோ, கைதோ இல்லை இர்ஃபான் குற்ற வழக்குகளில் சிக்கினாலும் திமுக அவரைக் காப்பாற்றுவதாக பெரும் சர்ச்சைகள் எழுகின்றன.
விவாகரத்தான பெண்களே குறி
கோவையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனத்தை நடத்துபவர். குக் வித் கோமாலி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடிகராகவும் புகழ் பெற்றவர். அவருக்கு முதல் மனைவி ஸ்ருதியுடன் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசால்டா, இன்ஸ்டாகிராமில் திருமண கோலத்தில் புகைப்படம் பதிவிட்டு, ரங்கராஜுடன் திருமணமானதாகவும், 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தைக்கு ரஹா ரங்கராஜ் என்று பெயர் வைப்பதாகவும் அறிவித்தார். ஆனால், திடீரென மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஜாய் கிரிசால்டா புகாரளித்த சில நாட்களிலேயே மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இது வைரலாகி குழப்பத்தை ஏற்படுத்தியது. மாதம்பட்டி ரங்கராஜ் "விவாகரத்தான பெண்களையே குறி வைக்கிறார்" என சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாதம்பட்டி ரங்கராஜை காப்பாற்றும் இர்ஃபானின் திமுக சோர்ஸ்
மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம், ஜாய் கிறிசால்டாவின் குற்றச்சாட்டுகள் அவதூறானவை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கோரியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ், "அவசியம் வந்தால் நானே பேசுவேன்" என்று கூறி, வதந்திகளை மறுத்துள்ளார், ஆனால் விரிவான விளக்கம் தரவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட ஜாய் கிறிசால்டாவோ, "கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க, நீ வெளியே தப்பிக்கிறாய்… இதுதானா உன் அன்பு அறிமுகம்..? எனப் புலம்பித் தவிக்கிறார்.
இப்படி குற்றப்பின்னணி கொண்ட பிரபல யூடியூபர்கள் மீது முகாம் இருந்தும் அவர்கள் கைது செய்யப்படாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். திமுக அரசு அவர்களை காப்பாற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இர்ஃபானுக்கு திமுகவில் செல்வாக்கு இருக்கிறது. இர்ஃபானும், மாதம்பட்டி ரங்கராஜும் நல்ல நண்பர்கள். ஆகவே தன்னைப்போலவே திமுகவின் சோர்ஸை வைத்து இர்ஃபான் மாதம்பட்டி ரங்கராஜையும் காப்பாற்றி வருகிறார் என்கிற தகவலும் றெக்கைகட்டி பறக்கிறது.