- Home
- Politics
- திமுக-அதிமுகவால் நெருங்கவே முடியாத இரு தொகுதிகள்.! ரெண்டு பேரும் ஒரு முறை கூட ஜெயிச்சது இல்லையாம்.! எந்த தொகுதிகள் தெரியுமா?
திமுக-அதிமுகவால் நெருங்கவே முடியாத இரு தொகுதிகள்.! ரெண்டு பேரும் ஒரு முறை கூட ஜெயிச்சது இல்லையாம்.! எந்த தொகுதிகள் தெரியுமா?
Constituencies Where DMK and AIADMK Never Won : தமிழகத்தின் இரு பெரும் துருவங்களாக இருக்கும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளாலும் ஜெயிக்கவே முடியாத இரண்டு தொகுதிகள் தமிழ்நாட்டில் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

திராவிட கட்சிகளால் நெருங்க முடியாத இரு தொகுதிகள்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளே அதிகார மையங்களாக திகழ்ந்து வருகின்றன. 1967 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த இரண்டு கட்சிகளைத் தாண்டி ஒரு மாற்று சக்தியால் ஆட்சியைப் பிடிப்பது என்பது எட்டா கனியாகவே இருந்து வருகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், இந்த இரண்டு கட்சிகளாலும் இன்று வரை ஒரு முறை கூட வெற்றி பெற முடியாத இரண்டு தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகள் என்ன? அதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
1967-க்குப் பின்னர் மாறிய அரசியல் களம்
தமிழக அரசியல் வரலாற்றில் 1967ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையை கொடுத்த ஆண்டாகும். அதுவரை அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை வீழ்த்தி அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கினார். அதன் பின்னர் திமுக, அதிமுக என மாறி மாறி இரண்டு கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள இரண்டு தொகுதிகள் மட்டுமே திராவிட அரசியலுக்கு அப்பாற்பட்டு விளங்குகிறது. இந்த இரண்டு தொகுதிகள் இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகின்றன.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகால தேர்தல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அங்கு திராவிட கட்சிகளின் தாக்கம் மிகக் குறைவு என்பது தெளிவாக தெரியும். இந்த தொகுதியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று வந்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக கிள்ளியூர் தொகுதி காங்கிரஸின் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது. 1996, 2001 ஆகிய தேர்தல்களில் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், 2006 தொடங்கி 2021 வரை காங்கிரஸ் கட்சியும் இங்கு வெற்றி பெற்று வந்துள்ளன.
ஏன் திமுக/அதிமுக ஜெயிக்கவில்லை
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பெரும்பாலும் இந்த தொகுதியை தங்கள் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பாஜக போன்ற கட்சிகளுக்கு ஒதுக்குகின்றன. இதனால் இந்த கட்சிகளுக்கு இங்கு நேரடியாக போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும் மீனவ மக்கள், நாடார் சமுதாயத்தினர் அதிகம் இருப்பதால் தேசிய கட்சிகள் அல்லது உள்ளூர் செல்வாக்கு மிக்க தலைவர்களை சார்ந்த வேட்பாளர்களின் தேர்வு அமைகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் சூழல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. மொழி மற்றும் கலாச்சார ரீதியாக கேரளாவுடன் நெருக்கம் கொண்டிருப்பதாலும், தேசிய கட்சிகளின் வேர் இங்கு வலுவாக இருப்பதாலும், திராவிட அரசியல் இங்கு இரண்டாம் நிலையிலேயே இருக்கிறது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி
குமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் கிள்ளியூரைப் போன்றே திராவிடக் கட்சிகளுக்கு எட்டாக் கனியாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி, பின்னர் காங்கிரஸ் வசமானது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி 2011 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், அவர் பாஜகவிற்கு தாவினார். அதன் பின்னர் நடந்த இடைத்தேர்தலிலும் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரே வெற்றி பெற்றார். திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இங்கு பலமுறை போட்டியிட முயன்றும், தங்களின் கூட்டணிக் கணக்குகளுக்காக தொகுதியை விட்டுக் கொடுக்கின்றன. தனித்துப் போட்டியிட்ட காலங்களில் இக்கட்சிகளால் இந்த தொகுதியில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற முடிந்ததே தவிர, வெற்றி பெற முடியவில்லை.
திராவிட கட்சிகளால் வெற்றி பெற முடியாமல் போனதற்கான காரணங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு முன்பே அங்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக வேரூன்றி இருந்தன. 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்தாலும் அந்த மக்கள் தேசிய கட்சிகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். எல்லையோர தொகுதிகள் என்பதால் திராவிட கட்சிகளின் தமிழ் தேசிய முழக்கம் அல்லது மாநில சுயாட்சி முழக்கங்களை விட அங்குள்ள உள்ளூர் பிரச்சனைகள், வாழ்வாதாரப் போராட்டங்களுமே தேர்தலை தீர்மானிக்கின்றன. மேலும் இந்த தொகுதிகளில் திமுக அல்லது அதிமுக சார்பில் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்த ஒரு உள்ளூர் தலைவர் இதுவரை உருவாகாததும் திராவிடக் கட்சிகளால் இத்தொகுதிகளை வெல்ல முடியாதது முக்கிய காரணமாகும்.
வியூகம் மாற்றப்படுமா?
தமிழகத்தின் மற்ற 232 தொகுதிகளிலும் ஏதோ ஒரு காலத்தில் திமுக அல்லது அதிமுக வெற்றிக்கொடியை நாட்டியுள்ளன. ஆனால் கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகள் மட்டும் இன்றும் திராவிட கட்சிகள் வெல்ல முடியாத இடங்கள் என்ற வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகின்றன. வருங்காலங்களில் இந்த தொகுதிகளை கைப்பற்ற திராவிட கட்சிகள் தனித்துவமான வியூகங்களை வகுக்குமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு தொடர்ந்து தாரை வார்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

