தமிழகத்தில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதா.? முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு தகவல்
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தாமதத்திற்கு ஆளுநரே காரணம் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு. ஆய்வு செய்வதற்காக நேற்று இரவு திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். இதனையடுத்து இன்று தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு. தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.
இதனையடுத்து திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள கூழையாற்றில் ரூ.194.80 இலட்சம் மதிப்பீட்டில் 7.79 கி.மீ தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போ வானத்திற்கும் பூமிக்கும் குதித்தீங்க.! இப்போ என்ன செய்ய போறீங்க.? - ஸ்டாலினை சீண்டும் இபிஎஸ்
தூர்வாரும் பணியை பார்வையிட்ட ஸ்டாலின்
இதனை தொடர்ந்து இருதயபுரம் மற்றும் வெள்ளனூர் கிராமங்களில் நந்தியாற்றின் நீரோட்ட பாதையில் உள்ள முட்செடிகளை முழுவதுமாக அகற்றி அதனை 5.90 கி.மீ. நீளம் தூர்வாரி இரு பக்கக் கரைகளையும் பலப்படுத்திட ரூ.194.25 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் உரிய நேரத்தில் கடைமடை வரை தங்குதடையின்றி சென்றடையும்
டெல்டா உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்
இதனை தொடர்ந்து தூர்வாரும் பணி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறோம். வேளாண் துறைக்கு தனி கவனத்தை இந்த அரசு செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு அறிவித்த உடன் அதனை தமிழ்நாடு அரசு எதிர்த்தது.
அதை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தெரிவித்தேன். அதனையடுத்து ஒன்றிய அரசு அதை ரத்து செய்தது. டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக தி.மு.க அரசு செயல்படும் என கூறினார். காவேரி பாசன பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வார கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.62.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 3889 கி.மீ தூர்வாரப்பட்டது.
மேட்டூர் அணை திறப்பு
4.90 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியும், 13.341 லட்சம் ஏக்கர் சம்பாசாகுபடியும், 39,73000 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை செய்தோம். அதை சாதனை என்பதை விட வேளாண் புரட்சி என கூறலாம். ஜீன் 12 ஆம் தேதி மேட்டூரில் தண்ணிர் திறக்கப்பட உள்ளது. சென்ற ஆண்டுகளில் சாதித்து காட்டியதை போலவே மேட்டூர் அணை நீர் காவேரி டெல்டா பகுதிக்கு வருவதற்கு முன்பாகவே தூர்வாரும் பணிகள் நிறைவடையும். டெல்டா விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
மேகதாதுவில் அணைகட்ட அனுமதி இல்லை
கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசு மட்டுமல்ல ஏற்கனவே இருந்த அரசுகளும் மேகதாதுவில் அணை கட்டுவோம் என தான் தொடர்ந்து கூறி வந்தார்கள். அப்போது இருந்தே நாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். தொடர்ந்து அதை எதிர்ப்போம். மேகதாது விவகாரத்தில் அணை கட்டக்கூடாது என்பதில் கலைஞர் எப்படி உறுதியாக இருந்தாரோ அதே உறுதியோடு இந்த ஆட்சி இருக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுனர் கிடப்பில் போட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றத்தை நாடலாமா என சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததற்கு ஆளுநர் தான் காரணம். இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கவே பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சர் இருக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
அமைச்சரவையில் மாற்றமா.?
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், எனக்கு வந்த தகவலின் படி ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வரப்போகிறது என கூறிக்கொண்டுள்ளார்கள் என தெரிவித்தார். மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பரப்பப்படுகிறது. வீட்டு இணைப்புக்கு எந்த வித கட்டன உயர்வும் கிடையாது. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்.
ஒன்றிய அரசின் மின் கட்டண விதிப்படி 4.7 விழுக்காடு கட்டணத்தை உயரத்த வேண்டும் ஆனால் 2.18 விழுக்காடாக அதை தமிழ்நாடு அரசு குறைத்து அந்த தொகையையும் மானியமாக தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்