தவெகவில் இணையப்போகிறேனா..? ஷாக் அப்டேட் கொடுத்த வைத்திலிங்கம்- அதிமுக டாக்டர் சரவணன்..!
சில நாட்களுக்கு முன்பே வைத்திலிங்கம் திமுகவில் இணையப்போவதாகவும் பேச்சு அடிபட்டதை, அதை அவர் மறுத்திருந்தார்.

தவெகவில் இணையும் வைத்திலிங்கம்
ஓரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார். அவர்
சமீபத்தில் அதிமுகவில் உள் பிளவுகளால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது போல தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது முடிவை திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய செங்கோட்டையனின் வருகை விஜய்க்கும், தவெக தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. கொங்கு மண்ணில் திமுகவின் செந்தில் பாலாஜிக்கு நிகராக செங்கோட்டையனுக்கு ஆதரவு இருப்பதால் செங்கோட்டையனை வைத்து கொங்கு பகுதி வாக்குகளை அள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
வைத்திலிங்கம் சொன்ன அப்டேட்
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணியில் இணைந்த வைத்திலிங்கம் இன்று தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன்பே வைத்திலிங்கம் திமுகவில் இணையப்போவதாகவும் பேச்சு அடிபட்டதை, அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில், வைத்திலிங்கம் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய இருப்பதாக உறுதிபடக்கூறப்பட்டது.
டெல்டா பகுதியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் வைத்திலிங்கம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ஆனால் ஓபிஎஸ் பக்கம் சென்றும் வைத்திலிங்கத்துக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய கட்சியும் தொடங்கவில்லை. இதனால் தவெகவில் இணைகிறார் எனக் கூறப்பட்ட நிலையில் இதனை மறுத்துள்ள அவர், ‘‘நான் தவெகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுவது உண்மை இல்லை. எந்தக் கட்சியிலும் இணைய முடிவெடுக்கவும் இல்லை’’ எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் டாக்டர் சரவணன்
அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை தவெகவில் இணைக்க முயற்சித்து அவர் கடைசி நேரத்தில் மறுத்துவிட்டாதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பனையூரில் விஜயை சந்தித்து மதுரையைச் சேர்ந்த அதிமுக மருத்துவ்ப அணி செயலாளர் டாக்டர் சரவணனும் இணைகிறார் எனக்கூறப்பட்டது. இதுகுறித்து டாக்டர் சரவணனை அழைத்து நாம் கேட்டபோது, ‘‘பலமாக சிரித்தவர், நான் இப்போது அதிமுக பொதுக்குழுவில் இருக்கிறேன். தவெகவில் நான் இணைவதாக கூறுவது அப்பட்டமான வதந்தி. நான் அடுத்து மதுரையில் அதிமுக மாவட்டச் செயலாளராகப் போகிறேன். இரட்டை இலை சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறேன்’’ என அடித்துச் சொல்கிறார்.
