- Home
- Tamil Nadu News
- Puducherry
- பொங்கல் பரிசுத்தொகுப்பு.. பொதுமக்களுக்கு முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!
பொங்கல் பரிசுத்தொகுப்பு.. பொதுமக்களுக்கு முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!
தகுதியுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் பச்சரிசி, நாட்டு சர்க்கரை, நெய் உள்ளிட்ட 6 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். இந்த பரிசு தொகுப்பு ஜனவரி 3 முதல் விநியோகம்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும், அப்போதைய புதுச்சேரி அரசுக்கும் மோதல் ஏற்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி
இதனையடுத்து பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக ரங்கசாமி இருந்து வருகிறார். இந்நிலையில், புதுச்சேரி அரசு ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை
அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் அட்டைதாரர்களை தவிர்த்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடை மூலம் 5 மளிகை பொருட்கள் மற்றும் ஒரு பையுடன் கூடிய கிட் இலவசமாக வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பச்சரிசி-4 கிலோ, நாட்டு சர்க்கரை-1 கிலோ, பாசி பருப்பு-1 கிலோ, நெய்-300 கிராம், சூரியகாந்தி எண்ணெய்-1 லிட்டர், பை-1 ஆகிய பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்வது அரசு கூட்டுறவு நிறுவனமான கான்பெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (பாண்லே) இருந்து நெய் கொள்முதல் செய்வதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் தவிர்த்து மற்ற பொருட்கள் ஆன்லைன் டெண்டர் செயல்முறை மூலம் கொள்முதல் செய்ய கான்பெட் நிறுவனம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமை பொருள் வழங்கல்துறை மூலம் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

