இன்னும் என்னுடைய ஆட்டம் முடியல.. சைலண்ட் மோடில் இருந்து கொண்டே இபிஎஸ்க்கு ஆப்பு வைக்கும் ஓபிஎஸ்?
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் வைத்தியலிங்கம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமென்று தீர்ப்பில் சொல்லவில்லை.. இபிஎஸ்ஐ அலறவிடும் கே.சி.பழனிசாமி..!
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயசந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம்.துரைசாமி சுந்தர்மோகன் ஆகியோர் அமர்வு தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து பிப்ரவரி 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என கூறவில்லை.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
இதையும் படிங்க;- இபிஎஸ்ஐ ஓவர் டேக் செய்த ஓபிஎஸ்.. பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்..!
இதனையடுத்து, ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது கடிதம் எழுதினார்.
ADMK OPS EPS and Election commission
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த அதிமுக அடிப்படை உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கட்சி திருத்த விதிகளின்படி எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடும் வகையில் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
அண்மையில் உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அளித்த தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சிவில் வழக்கை தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்.