உலக சிட்டுக்குருவி தினம் 2025 : வீட்டுக்கு குருவி வந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா?
உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பதிவில் சிட்டுக்குருவிகளின் சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.

World Sparrow Day 2025 : சிட்டுக்குருவிகள் அருகிவரும் இனமாகிவிட்டது. அவற்றை பாதுகாக்கும் நோக்கில் தான் உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் வீடுகளில் காணப்படும் பரண், மாடம், விட்டம், ஓடுகளின் இடைவெளிகளில், காற்றுக்காக விடப்படும் பொந்துகளில்தான் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் சிறுகூடு கட்டி வசிப்பது வழக்கமாக இருந்துவந்தது. தற்போதைய காலகட்டத்தில் கட்டிடங்கள் பெரிதாகின. மரங்கள் குறைந்தன. வீடுகளில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் மேம்பட்டுவிட்டன. குருவிகளுக்கு நம் வீடுகள் அந்நியமாகிவிட்டன. 13 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட சிட்டுக்குருவிகள் இப்போது 5 ஆண்டுகளுக்குள்ளாகவே இறந்துவிடுகின்றன. இந்த நிலைக்கு காரணம் மனித இனத்தின் அசுர தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
சிட்டுக்குருவி தினம் வந்தது எப்படி?
வீட்டுக்குள் வெளிக்காற்று வர முடியாதபடி நெருக்கமான நகர்ப்புற வீடுகளில் குருவிகள் வாழவே முடியாத சூழல் உள்ளது என்பதை மறுக்க முடியாது. நகர்புறங்களில் உள்ள கண்ணாடி ஜன்னல்களின் அர்த்தம் புரியாமல் அதில் மோதி உயிரிழக்கும் சோகம் கூட உண்டு. கிராமப்புறங்களிலும் வீடுகள் கான்கீரிட் ஆனதால் குருவிகள் வீட்டிற்குள் வருவது குறைந்துவிட்டது. இப்படியாக சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய தேவையான சூழலே இல்லாமல் சில வருடங்களில் 60%க்கும் மேல் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிலையை மாற்றும்நோக்கில் தான் 2010ஆம் ஆண்டில் மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா சபை அங்கீகாரம் செய்தது.
இதையும் படிங்க: சிட்டாக பறக்கும் சிட்டுக்குருவிகள் எங்கே போனது…?? - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
முன்னோர் நம்பிக்கை:
வீடுகளுக்கு சிட்டுக்குருவி வருவது நல்லது என முன்னோர் கருதினர். சிட்டுக்குருவிகள் வந்து தங்கும் வீட்டில் வாழையடி வாழையாக வம்சம் தழைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வந்தது. சில நம்பிக்கைகள் நல்லதை நடத்தும். அப்படிப்பட்ட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. சிறு உயிரென்றாலும் அதை வாழ வைப்போர் வாழ்க்கை வசந்தமாக தானே இருக்கும். இந்தப் பதிவில் சிட்டுக்குருவிகளை பலுகி பெருகச் செய்ய அவற்றை வீட்டிற்கு எப்படி வரவழைப்பது என காணலாம்.
இதையும் படிங்க: வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா? கெட்டதா?
சிட்டுக்குருவிகளை வர வைப்பது எப்படி?
சிட்டுக்குருவிகள் தோட்டத்தில் உள்ள புதர்கள், செடிகள், மரங்களில் கூட கூடு கட்டக் கூடியவை. உங்களின் வீட்டிற்கு அருகாமையில் சிட்டுக்குருவிகள் வருகிறதா என கவனிக்க வேண்டும். அப்படி வரும்பட்சத்தில் அவற்றுக்கு உணவு வையுங்கள். பொடிக்கப்பட்ட அரிசி, சிறு தானியங்களை வைக்கலாம். அவை வரும் திசையில் அவற்றின் தாகம் தணிக்க தண்ணீர் வைக்கலாம். தண்ணீரை அவ்வப்போது மாற்றி வைக்கவேண்டும். இல்லையென்றால் கொசு பரவ வழிவகை செய்துவிடும். ஒரு அட்டைப்பெட்டியில் சிட்டுக்குருவி செல்லும் அளவுக்கு துளையிட்டு உயரத்தில் தொங்கவிடலாம். குருவிகள் அதில் தங்கும் வாய்ப்புள்ளது