மரப்பலகை ஆரோக்கியம்னு நினைக்குறீங்களா? இந்த ஆபத்து தெரியுமா?
காய்கறிகளை நறுக்குவதற்கு மரப்பலகையை பயன்படுத்துவது சில ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக நம்முடைய வீடுகளில் காய்கறிகளை நறுக்குவதற்கு பலர் மரப்பலகையை தான் பயன்படுத்துவார்கள். ஆனால் மரப்பலகையில் காய்கறி நறுக்கினால் சில ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அது குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஆகவே மரப்பலகையில் காய்கறிகளை வெட்டுவதால் ஏற்படும் 5 ஆபத்துக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. மரப்பலகையில் தான் பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளன. ஏனெனில் மரப்பலகையில் காய்கறி நறுக்கும்போது அதில் சின்ன சின்ன கீறல்கள் ஏற்படும். பின் அந்தக் கீறல்களுக்குள்ளே காய்கறி துண்டுகள் போய் சிக்கிக் கொள்ளும். இதை நாம் சரியாக கழுவவில்லை என்றால் பாக்டீரியாக்கள் அதில் பெருகி அடுத்த முறை காய்கறிகள் வெட்டும்போது அது அவற்றுடன் கலந்து பிறகு நம் உடம்பிற்குள் உணவு மூலமாக சென்று ஆபத்தை ஏற்படுத்தும்.
2. பிளாஸ்டிக் போன்ற போர்டுகள் மாதிரி மரப்பலகையை சும தண்ணீரில் அலசினால் மட்டும் போதாது. மரப்பலகையை தண்ணீரில் அலசிய பிறகு அதை வெயிலில் கண்டிப்பாக காய வைக்க வேண்டும். இல்லையென்றால், பூஞ்சை வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். மேலும் பூஞ்சை காளான் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளன.
3. மரப்பலகை சீக்கிரமாகவே சேதமடைந்துவிடும். ஏனெனில் தொடர்ச்சியாக மரப்பலகையில் கத்தி படும்போது அதன் மேல் பகுதியில் மெல்ல மெல்ல அரிக்க ஆரம்பித்து, பிறகு ஒரு கட்டத்தில் பலகை மேடு பள்ளமாகிவிடும். இதனால் நீங்கள் காய்கறிகளை நறுக்கும்போது கத்தி தவறுதலாக வழுக்கி உங்களது கையில் வெட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
4. மரப்பலகை வாசனைகளை உறிஞ்சும் தன்மையைக் கொண்டது. அதாவது நீங்கள் மரப்பலகையில் வெங்காயம், பூண்டு, மீன் இவற்றை வெட்டினால் அதன் வாசனை அப்படியே பலகையில் ஒட்டிக் கொள்ளும். பிறகு அடுத்த முறை நீங்கள் அதில் பழம் அல்லது வேறு ஏதாவது வெட்டும்போது, அந்த வாசனை அதில் அடிக்கும்.
5. மரப்பலகைக்கு நிறைய பராமரிப்பு தேவைப்படும். அதாவது பலகையை வெறும் தண்ணீரில் மட்டும் கழுவினால் போதாது. அடிக்கடி அதில் எண்ணெய் தேய்த்து, வெயிலில் காய வைத்து, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இப்படி நிறைய பராமரிப்பு விஷயங்கள் இருக்கு. இவற்றை நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால் பலகை சீக்கிரமாகவே சேதமடைந்து விடும்.