- Home
- Lifestyle
- Male Fertility : 30 வயசுக்கு மேல் அப்பாவாக நினைக்கும் ஆண்களுக்கு வரும் பிரச்சனைகள்? இது தெரியாம முடிவு எடுக்காதீங்க!!
Male Fertility : 30 வயசுக்கு மேல் அப்பாவாக நினைக்கும் ஆண்களுக்கு வரும் பிரச்சனைகள்? இது தெரியாம முடிவு எடுக்காதீங்க!!
ஆண்கள் தங்களின் 30 வயதுக்கு பின் தந்தையாக முயற்சி செய்தால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரச்சனைகள், தீர்வுகளை இங்கு காணலாம்.

Male Fertility After 30
ஒரு ஆண் தந்தையாக மாற குறிப்பிட்ட வயதுவரம்பு இல்லை. சில குடும்ப பொறுப்புகள் ஆண்களை திருமணம், குழந்தை பேறு போன்றவற்றை தேர்ந்தெடுப்பதை தாமதிக்க வைக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறையும் தந்தையாவதை தள்ளி போட ஒரு காரணம்தான். சிலர் 40 வயதுக்கு மேல், 50 வயதுகளில் கூட தந்தையாக நினைக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு பின் கருவுறுதலை சில சிக்கல்கள் என தொடங்குகின்றது.
கருவுறுதல் சாத்தியம்!
பெண்களுக்கு வயது அதிகமாகும் போது கருவுறுதலுக்கான சாத்தியங்கள் எவ்வாறு குறைகிறதோ, அதேப் போலவே ஆண்களுக்கும் குறைகிறது. ஆண்களின் வயது ஏற ஏற அவர்களுடைய விந்தணுக்கள் தரம், செயல்திறன், எண்ணிக்கை ஆகியவை குறைகிறது. ஆண்களின் வயது அதிகமாகும்போது விந்தணுக்களுக்குள் டி.என்.ஏ துண்டாகும் வீதம் அதிகமாகிறது. இதனால் இயற்கை கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது.
செயற்கை கருவுறுதல்
தாமதித்து தந்தையாக நினைப்போர் செயற்கையான கருவுறுதலை நம்பி இருந்தால் அதில் உள்ள சாத்தியங்களும் வயது காரணமாக குறைய வாய்ப்புள்ளது. வயதான பின் கருத்தரிக்க முயற்சி செய்வது இயற்கை கருவுறுதலிலும் சிக்கல்தான். குறிப்பாக பிறக்கும் குழந்தைகளுக்கும் உடல்நலக் கோளாறுகள் இருக்க வாய்ப்புள்ளது. சில நேரங்களில் கருத்தரிப்புக்கு பின்னும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தம்பதிகள் மனம் சோர்ந்து போகலாம்.
குழந்தை ஆரோக்கியம்
வயதான பின் தந்தையாக நினைக்கும் ஆண்களின் விந்துவின் குரோமோசோமில் அசாதாரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது. 70 லட்சம் பேரை கொண்ட ஓர் ஆய்வில், வயதான பின் தந்தையாக நினைக்கும் ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு ஆட்டிசம், பைபோலார் டிஸார்டர், ஏடிஎச்டி (ADHD), ஸ்கிசோஃப்ரினியா ஆகியவை வர வாய்ப்புள்ளது. இது தவிர குழந்தைகளுக்கு நரம்பியல் மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வயதான பின் தந்தையாகும் ஆண்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், அவர்களுடைய அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் மரபணுரீதியாக கடத்தப்பட வாய்ப்புள்ளது.
தாயின் ஆரோக்கியம்
கருவுறுதலில் தந்தையின் வயது என்பது கருவுற்றிருக்கும் தாயின் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. வயதான பின் தந்தையாக முயற்சிக்கும் ஆண்களின் மனைவிகளின் ஆரோக்கியமும், கருவுறுதலின் மூலம் பாதிக்கப்படுகிறது. கருவுறும் பெண்கள், பிரீக்ளாம்ப்சியா, கர்ப்பகால நீரிழிவு ஆகிய நோய்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைவது காரணம். மேலும் கரு வளர்ச்சி, நஞ்சுக்கொடி செயல்பாட்டை பாதிப்பது உள்ளிட்ட மற்ற வயது தொடர்பான காரணங்களும் உள்ளன.
மற்ற பிரச்சனைகள்!!
கருவுறும்போது தந்தையின் வயது அதிகம் இருப்பதால் குழந்தை குறைபிரசவத்தில் பிறக்கலாம். குழந்தை குறைந்த எடையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. அதனால் தீவிர சிகிச்சை தேவை கூட தேவைப்படலாம்.
வாழ்க்கை முறை சவால்கள்:
ஆண்கள் தங்களுடைய முதுமையை நெருங்கும் 40, 50 அல்லது 60 வயதுகளில் குழந்தையை பெற்று கொண்டு அவர்களை கவனித்து கொள்வது சாதாரணமான விஷயம் அல்ல. அவர்களுக்கே அரவணைப்பு தேவைப்படும் காலகட்டம் அது. வயது அதிகரித்த பின் தந்தையாகும் பலருக்கும் மன அழுத்தம், சோர்வு, தனிமை ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைக்கும், தந்தைக்கும் இடையில் பாசப் பிணைப்புக்கு பதிலாக ஒரு தலைமுறை இடைவெளி ஏற்படுகிறது. இருவரின் ஆர்வங்கள், தகவல் பரிமாற்ற முறை, வாழ்வியல் மதிப்புகள் மாறியிருக்கும். அதனால் புரிதல் குறைவாகவும், இருவருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகவும் உருவாகும். இதை களைய தந்தையர்கள் தனிக்கவனம் எடுத்து முயற்சி செய்வது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே தந்தை, மகன்/மகள் உறவு சிறப்பாக இருக்கும். இது தாய்க்கும் பொருந்தும்.
இந்தப் பதிவில் தாமதித்த கருவுறுதலால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தெரிந்து கொண்டோம். 30 வயதுக்குப் பின் தந்தையாக நினைக்கும் ஒவ்வொரு ஆணும் இந்த சிக்கல்களையும் மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் நம் வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் நாமே பொறுப்பாளர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.