வெறும் 15 நிமிட வாக்கிங் அற்புதம்.. சாப்பிட்டதும் நடந்தால் இத்தனை நன்மைகளா?
15 Minutes Walking After Meals : சாப்பிட்ட பின்னர் 15 நிமிடங்கள் நடப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

வெறும் 15 நிமிட வாக்கிங் அற்புதம்.. சாப்பிட்டதும் நடந்தால் இத்தனை நன்மைகளா?
உடலை ஆரோக்கியமாக பராமரிக்க சில விஷயங்களை கண்டிப்பாக செய்தாக வேண்டும். தினமும் சத்தான உணவுகளை உண்பது எவ்வளவு முக்கியமோ அதைப் போல உடலுக்கு தீங்கு விளைக்கும் உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். உங்களால் தினமும் அதிக நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் நடைபயிற்சியாவது செய்வது நல்லது. அதிலும் சாப்பிட்ட பின் நடப்பது உடலுக்கு ஏராளமான நன்மைகளை செய்யும். இந்த பதிவில் சாப்பிட்டதும் ஏன் 15 நிமிடம் நடக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
சாப்பிட்டதும் 15 நிமிடம் ஏன் நடக்க வேண்டும் ?
சாப்பிட்டவுடன் நடப்பது உங்களுடைய ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதனால் உங்களுடைய எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது தவிர, சாப்பிட்ட பின்னர் நடப்பது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவியாக இருப்பதாக சர்வதேச பொது மருத்துவ இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வாழ்க்கையை மாற்றும் '10' நிமிட வாக்கிங்.. பலர் அறியாத சூப்பர் ட்ரிக்!!
செரிமானத்திற்கு நல்லது!
சாப்பிட்ட பின் நடப்பதால் உடலின் இயக்கம் நன்றாக இருக்கிறது. இந்த உடல் செயல்பாடு காரணமாக வயிறு மற்றும் குடல் நன்கு இயங்குகிறது. இதனால் செரிமானம் தூண்டப்பட்டு அஜீரணம் உள்ளிட்ட வயிற்று கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன. சாப்பிட்ட பின்னர் 15 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி செய்வது செரிமானத்தை தூண்டுவதோடு அனைத்து வயிற்று பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவுகிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்பாடு:
தொடர்ந்து செய்யப்பட்ட ஆராய்ச்சியின் படி, உணவுக்கு பின்னர் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்கு பின் நடந்தால் அவர்களுடைய ஆரோக்கியம் மேம்படும்.
எடை இழப்பு:
எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பதோடு உடற்பயிற்சி செய்வதையும் வழக்கப்படுத்த வேண்டும். உணவும், உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்யும்போது அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும். தினமும் மதியம் சாப்பிட்டபின் 15 நிமிடங்கள் நடப்பது செரிமானத்தை தூண்டி எடை அதிகரிப்பை தடுக்கிறது.
இதய ஆரோக்கியம்:
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகள் சாப்பிட்ட பின் நடப்பதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதை விளக்குகிறது. உணவுக்குப் பின் நடைபயிற்சி செய்வதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். கெட்ட கொழுப்பு கரையும். இதன் காரணமாக இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. நடைபயிற்சி மிதமான கார்டியோ பயிற்சியாகும்.
ஆழ்ந்த தூக்கம்:
நடைபயிற்சி செய்வதால் உடலின் தூக்க-விழிப்பு சுழற்சி மேம்படுகிறது. இதனால் தூக்கம் சீராகிறது. உணவுக்கு பின் நடந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும். உடலின் இயக்கம் மேம்படுவதால் இரவில் நன்கு தூங்க முடிகிறது.
மற்ற நன்மைகள்:
நடைபயிற்சி உங்களுடைய ஆற்றலை அதிகரித்து ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நீங்கள் தினமும் நடப்பதால் தசைகள், எலும்புகள் உறுதியாகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இறுகும். மனநிலை சீராகி மனச்சோர்வு குறைகிறது. நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுவாக நடப்பது காரணமாகிறது.
நினைவில் கொள்ளுங்கள்:
சாப்பிட்டதும் நடப்பது எல்லோருடைய உடலுக்கும் ஒரே மாதிரியான பலன்களை தருவதில்லை. சிலர் சாப்பிட்டதும் நடந்தால் வயிறு வலிப்பது போல உணர்வார்கள். இந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க நீங்கள் சாப்பிட்ட பின் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் கழித்து நடக்கலாம். இந்த பயிற்சியை முதலில் தொடங்கும் போது ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மெதுவாக நடப்பதை பழக்கப்படுத்துங்கள். நாளடைவில் சாப்பிட்டபின் 15 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
இதையும் படிங்க: காலையா, மாலையா? எப்போது நடப்பது சிறந்த பலன் தரும் தெரியுமா?