Hernia Symptoms: ஹெர்னியா என்றால் என்ன? அதன் முதல் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
Hernia: ஹெர்னியா ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடியது. அடிவயிற்றின் தசை பலவீனமடைந்து, குடல் பகுதி விதைப்பை (Scrotum) அல்லது தொடை இடுக்கு பகுதிக்கு இறங்குவது.

ஹெர்னியா
ஹெர்னியா என்பது தமிழில் பொதுவாக 'குடலிறக்கம்' என்று அழைக்கப்படுகிறது. நமது உடலின் உட்புற உறுப்பு அல்லது குடல் பகுதி, அதைத் தாங்கிப் பிடிக்கும் தசைச் சுவரில் ஏற்படும் பலவீனமான துளை வழியாக வெளியே பிதுக்கிக் கொண்டு வருவதையே குடலிறக்கம் என்கிறோம். இது ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடியது. இதன் அறிகுறிகள் என்னவென்றால் பளு தூக்கும்போதும், இருமும்போதும், கடினமான வேலைகள் செய்யும்போதும் ஹெர்னியா இருக்கிற இடத்தில் வலியும் வீக்கமும் ஏற்படும்.
வயிற்றில் தசை பலவீனம்
வயிற்றில் தசை பலவீனமாக இருக்கும் இடத்தில் ஒரு கட்டி மாதிரி இது தெரியும். ஆரம்பத்தில் வலி இருக்காது, ஆனால் போகப்போக வலி அதிகமாகும். படுக்கும்போதோ அல்லது கையால் லேசாக அழுத்தினாலோ இந்த கட்டி உள்ளே போய்விடும்.
பரம்பரை தசை பலவீனம்
பொதுவாக அடிவயிற்றில் வருவதுதான் சகஜமான ஹெர்னியா. அடிவயிற்று தசையும் தொடைப் பகுதியும் சேரும் இடத்தில் இது உருவாகும். வயது, பரம்பரை தசை பலவீனம், அதிக உடலுழைப்பு, புகைப்பிடித்தல் போன்றவை காரணமாக இருக்கலாம். வயிற்றுத் தசைகள் பலவீனமாக இருப்பதும், அடிவயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதும் கூட ஒரு காரணம்.
ஹெர்னியாவின் அறிகுறிகள்
வாந்தி, மலச்சிக்கல், அடிவயிற்றில் வீக்கத்தோடு கடுமையான வலியும் ஏற்படலாம். ஆனால், முதல் அறிகுறியே அந்த கட்டி மாதிரி வருவதுதான். உடம்பில் ஒரு பகுதி வீங்கி நிற்பது, படுக்கும்போது அல்லது அழுத்தும் போது அந்த வீக்கம் உள்ளே போவது போல உணர்வது, இவையெல்லாம் ஹெர்னியா அறிகுறிகள்தான்.
மருத்துவர் பரிசோதனை
மருத்துவர் நேரடியாக பரிசோதனை செய்தே ஹெர்னியாவைக் கண்டுபிடித்துவிடுவார். சில சமயம், அல்ட்ராசோனோகிராபி அல்லது சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். ஹெர்னியாவுக்கான காரணத்தைக் கண்டறிவதும் ரொம்ப முக்கியம்.
எப்படி உறுதி செய்வது?
மேலே சொன்ன அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால், நீங்களாக எதையும் முடிவு செய்யாமல் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். பரிசோதனைக்கு அப்புறம் மட்டும்தான் நோயை உறுதி செய்ய வேண்டும்.

