ஐபிஎல் 2020: என்னைய மாதிரியே ஆடுனாப்ள.. அதிரடி மன்னன் சேவாக்கே அங்கீகாரம் கொடுத்த வீரர்..!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் மனீஷ் பாண்டேவின் ஆட்டத்தை பார்த்த சேவாக், தன்னை போன்றே அவர் ஆடியதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மனீஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கரின் அபாரமான பேட்டிங்கால் 19வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் மட்டுமே அடித்தது. 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி 16 ரன்களுக்கே வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய 2 முக்கியமான விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும், அதன்பின்னர் மனீஷ் பாண்டேவும் விஜய் சங்கரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர்.
140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி கடைசிவரை போட்டியை எடுத்துச்சென்று வென்று கொடுத்தனர். இந்த போட்டியில் மனீஷ் பாண்டே மிகச்சிறப்பாக ஆடினார். இதற்கு முந்தைய போட்டிகளிலும் சரி, கடந்த சில சீசன்களிலும் சரி, பேட்டிங்கில் அவருக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தும் கூட, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் அவுட்டாகி சென்ற மனீஷ் பாண்டே மீது, இவரால் கடைசி வரை களத்தில் நின்று வின்னிங் நாக் ஆடமுடியுமா என்ற சந்தேகம் இருந்துவந்த நிலையில், தன்னால் முடியும் என நிரூபித்து காட்டினார்.
ராஜஸ்தானுக்கு எதிராக வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரும் பவர்ப்ளேயிலேயே ஆரம்பத்தில் அவுட்டாகிவிட்ட போதிலும், பயந்துபோய் தடுப்பாட்டம் ஆடாமல், களத்திற்கு வந்தது முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, 28 பந்தில் அரைசதம் அடித்ததுடன், 47 பந்தில் 8 சிக்ஸர்களுடன் 83 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்.
இந்த போட்டியில் மனீஷ் பாண்டேவின் பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட சேவாக், அவர் தன்னை போன்றே ஆடியதாக புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து யூடியூபில் பேசிய சேவாக், பாண்டே ஜி நான் ஆடுவது மாதிரியான இன்னிங்ஸை ஆடினார். விஜய் சங்கரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அருமையாக ஆடினார். ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு கிடைத்துவிட்டதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது என்றார் சேவாக்.
சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் அதிரடி வீரர்களில் ஒருவர் சேவாக். ஒருநாள், டெஸ்ட், டி20 என்ற பாரபட்சமெல்லாம் இல்லாமல் களத்திற்கு வந்த முதல் பந்து முதலே அடித்து ஆடி, முதல் பந்திலிருந்தே எதிரணிகளை அல்லு தெறிக்கவிடும் அதிரடி வீரர் சேவாக். நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் சேவாக், அவராகவே முன்வந்து, மனீஷ் பாண்டே தன்னை போன்றே பயமற்ற, துணிச்சலான இன்னிங்ஸ் ஆடியதாக பாராட்டியுள்ளார்.