சூர்யகுமாரை சூடாக்க முயன்று மூக்குடைபட்ட கோலி! உனக்கு அசிங்கமாவே இல்லையா? மானாவாரியா மானத்தை வாங்கிய ரசிகர்கள்
இந்திய அணியின் கேப்டன் என்ற தனது லெவலை மறந்து, படுமட்டமாக நடந்துகொண்ட விராட் கோலியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக அசிங்கப்படுத்திவருகின்றனர்.
ஐபிஎல் 13வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆர்சிபி அணி நிர்ணயித்த, 165 ரன்கள் என்ற இலக்கை சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் எளிதாக அடித்து வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவரும் நிலையிலும், சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் தொடர்ந்து இடம் மறுக்கப்பட்டுவருகிறது.
இந்த ஐபிஎல்லிலும் மிக அருமையாக ஆடிவருகிறார் சூர்யகுமார் யாதவ். ஆனாலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான டி20 அணியில் மீண்டும் சூர்யகுமாரின் பெயர் இல்லை. இது ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் ஜாம்பவான்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை புறக்கணித்த தேர்வாளர்களின் செவிட்டில் அறைந்தாற்போல, ஒரு இன்னிங்ஸை ஆடி தனது பேட்டால் பதில் சொன்னார் சூர்யகுமார் யாதவ்; அதுவும் இந்திய அணியின் கேப்டன் கோலி வழிநடத்தும் ஆர்சிபி அணிக்கு எதிராக. இதைவிட தரமான சம்பவம் செய்யவே முடியாது. தேர்வாளர்கள் மட்டுமல்லாது கோலியின் செவிட்டிலும் அறைந்ததுபோல இருந்தது சூர்யகுமார் யாதவின் இன்னிங்ஸ். 43 பந்தில் 79 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று மும்பை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
இந்த போட்டியில் தனது தரத்தை தானே குறைத்துக்கொள்ளும் விதமாக கோலி நடந்துகொண்டார். கோலி வழக்கமாக எதிரணி வீரர்களுக்கு அவர்களது பாணியிலேயே பதிலடி கொடுப்பது, ஆக்ரோஷம் காட்டுவது, ஸ்லெட்ஜிங் செய்வது போன்ற வேலைகளை செய்வார். ஆனால் அதை சர்வதேச போட்டிகளில் ஆடும்போது, ஆஸ்திரேலியா மாதிரியான அணிகளுக்கு எதிராக செய்ய வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல்லில், அதுவும் இதுவரை இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடிராத, இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களிடம் காட்டி தனது மதிப்பை குறைத்துக்கொள்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில், களத்தில் செட்டில் ஆகி, சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, 13வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை கவர் திசையில் ஃபீல்டிங் செய்த கோலி, பந்தை பிடித்துவிட்டு, சூர்யகுமார் அருகில் வந்து அவரை முறைத்தார். அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத சூர்யகுமார், அங்கிருந்து நகர்ந்து சென்று, தனது காரியத்தில் கண்ணாக இருந்து, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். சூர்யகுமாரை சூடாக்கி அவுட்டாக்க முயன்ற கோலியின் முயற்சி பலனளிக்கவில்லை.
கோலியின் இந்த மட்டமான செயலை கண்ட ரசிகர்கள், அவரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இதெல்லாம் அசிங்கமாவே இல்லையா கோலி, உங்களை நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது, இந்திய அணிக்காக ஆடிராத வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒரு வீரரிடம் இப்படி செய்து உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக்கொள்கிறீர்கள் என்று படுமோசமாக விளாசியுள்ளனர்.