ஐபிஎல் 2020: குடும்பத்தில் ஒருவர் இறந்த சோகத்தை மறைத்து சிஎஸ்கேவிற்காக ஆடிய ஷேன் வாட்சன்..!
தனது பாட்டி மறைந்த சோகத்தை தனக்குள் மறைத்துக்கொண்டு, டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவிற்காக களம் கண்டுள்ளார் ஷேன் வாட்சன்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3 முறை சாம்பியனும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியுமான சிஎஸ்கேவிற்கு இந்த சீசனின் தொடக்கம் சரியாக அமையவில்லை.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ராயுடுவின் புண்ணியத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளிலும் தோற்றது.
2018லிருந்து சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் ஷேன் வாட்சன், கடந்த 2சீசன்களிலும் பல முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடி சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். 2018ல் சன்ரைசர்ஸூக்கு எதிரான இறுதி போட்டி மற்றும் கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான இறுதி போட்டி ஆகிய இரண்டிலுமே சிறப்பாக ஆடினார்.
குறிப்பாக கடந்த சீசனின் இறுதி போட்டியில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக காலில் இரத்தம் சொட்ட சொட்ட கடைசி வரை களத்தில் நின்று அவர் ஆடிய பேட்டிங், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த சீசனில் இதுவரை ஷேன் வாட்சனுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் 4 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் அந்த போட்டியில் ராயுடுவின் அதிரடி அரைசதத்தால் சிஎஸ்கே வென்றது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 33 ரன்களும், டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக 14 ரன்களும் மட்டுமே அடித்தார் ஷேன் வாட்சன். அந்த 2 போட்டிகளிலுமே சிஎஸ்கே தோற்றது.
டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷேன் வாட்சனும் சரியாக ஆடவில்லை. சிஎஸ்கேவும் 49 ரன்கள் வித்தியாசத்தில் இளம் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், ஷேன் வாட்சன் அந்த போட்டியில் கடும் சோகத்தை மனதிற்குள் மறைத்து ஆடியது தெரியவந்துள்ளது. ஆம்.. ஷேன் வாட்சனின் பாட்டி(அம்மாவின் அம்மா) அந்த போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். பாட்டி மறைந்த சோகத்தை தனக்குள் அடக்கிக்கொண்டுதான் அந்த போட்டியில் ஆடியுள்ளார். இதையறிந்த ரசிகர்கள், அவரது அர்ப்பணிப்பை விதந்தோதி வருகின்றனர்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதால், அவரால் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முடியாத சூழல் உருவானது. ஏனெனில் சென்றால் உடனே திரும்பமுடியாது; திரும்பினாலும் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் உடனடியாக ஆடமுடியாது. எனவே ஐபிஎல்லில் ஆடும் அவரால் பாட்டியின் மறைவிற்கு செல்ல முடியவில்லை. அந்த சோகத்தை மறைத்துக்கொண்டுதான் அந்த போட்டியில் ஆடியுள்ளார்.
தனது பாட்டியின் மறைவு குறித்து பேசியுள்ள ஷேன் வாட்சன், எனது அன்பை என் குடும்பத்தினருக்கு இந்த நேரத்தில் தெரியப்படுத்த விரும்புகிறேன். எனது பாட்டி, என் அம்மாவிற்கு எப்பேர்ப்பட்ட அம்மாவாக இருந்தார் என்பதை நான் அறிவேன். என்னால் இந்த நேரத்தில் அங்கு இருக்க முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். நான் அங்கு இல்லையென்றாலும், எனது இதயமும் எண்ணமும் அங்குதான் இருக்கிறது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார் வாட்சன்.