ஐபிஎல் 2020: தினேஷ் கார்த்திக்கிடம் எத்தனையோ தடவை சொல்லிட்டேன்; ஆனால் திருந்துற மாதிரி தெரியல - முன்னாள் வீரர்
தினேஷ் கார்த்திக் ரன் ஓடும்போது தனது பேட்டிங் பார்ட்னரை கவனிக்காமல் தனதுபோக்கில் ஓடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் என்பதை அவருடன் ஆடிய வீரர் பத்ரிநாத் வர்ணனையில் தெரிவித்தார்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஆடிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ள கேகேஆர் அணியும், ஆடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவிடாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.
கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், நீண்ட அனுபவம் கொண்ட சீனியர் வீரர். தமிழ்நாடு அணிக்காக நிறைய உள்நாட்டு போட்டிகளிலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே ஐபிஎல்லிலும் ஆடிவரும் அனுபவ வீரர்.
தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை நிறைய பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.. அவர் களத்தில் இருக்கும்போது, பல சமயங்களில் எதிர்முனையில் இருக்கும் பார்ட்னர்களின் ரெஸ்பான்ஸை பெறாமலேயே அவராக ரன் ஓடுவார். பின்னர் பேட்டிங் பார்ட்னர் வேண்டாம் என்று மறுத்தபின்னர் க்ரீஸுக்கு திரும்பிவிட்டு, ஓடியிருக்கலாம் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்துவார்.
பேட்டிங் ஆடும்போது, மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேனையும் கருத்தில்கொண்டு, அவர் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் ஓட வேண்டும். நேரடியாக ஃபீல்டர் கைக்கு செல்லும்போதெல்லாம் தேவையில்லாமல் சும்மா சும்மா ஓடுவார்.
இதைத்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போதும் செய்தார். சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கேகேஆர் இலக்கை விரட்டும்போது, கலீல் அகமது வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு பந்தை ஃபைன் லெக் திசையில் கில் அடிக்க, அது நேரடியாக ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நின்ற ஃபீல்டர் கைக்கு சென்றது. ஷுப்மன் கில் க்ரீஸை விட்டு நகரக்கூட இல்லை; ஆனால் அவர் ரெஸ்பான்ஸ் செய்கிறாரா என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தினேஷ் கார்த்திக் ரன் ஓட, கில் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதையடுத்து மீண்டும் க்ரீஸுக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக், ஓடியிருக்கலாம் என்கிற ரீதியில் கில்லிடம் சொன்னார்.
அப்போது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனை செய்துகொண்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழ்நாடு அணியில் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து நிறைய ஆடிய அனுபவம் கொண்டவருமான பத்ரிநாத், நானும் எத்தனையோ முறை தினேஷ் கார்த்திக்கிடம் சொல்லியிருக்கிறேன்.. 2 பேரும் ஓடினால் தான் ரன்.. நீங்கள் ஒருவர் ஓடினால் அது ரன் அல்ல என்று பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால் அதையே தான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்று பத்ரிநாத் தெரிவித்தார்.