தப்பு பண்ணிட்டேன்; தோல்விக்கு நான் தான் காரணம்.. 2 கையையும் தூக்கி சரணடைந்த கோலி..!
கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் அடைந்த படுதோல்விக்கு இரு கைகளையும் உயர்த்தி நான் தான் காரணம் என கேப்டன் கோலி பொறுப்பேற்றார்.
ஐபிஎல் 13வது சீசனில் நேற்று துபாயில் நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஆர்சிபியும் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி, பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலுமே படுமோசமாக சொதப்பி, 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டி20 போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் என்பது மிகப்பெரிய தோல்வி.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, கேஎல் ராகுலின் அதிரடியான சதத்தால்(132 நாட் அவுட்) 20 ஓவரில் 206 ரன்களை குவித்து 207 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்தது.
ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ், ஃபின்ச் என அனுபவம் வாய்ந்த பெரும் அதிரடி படையே இருந்தும் கூட, அந்த அணி வெறும் 109 ரன்கள் அடித்து 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியில் ராகுல் ஒருவர் அடித்த ஸ்கோரைவிட, ஆர்சிபி ஒட்டுமொத்த அணியே 23 ரன்கள் குறைவாக அடித்து படுமோசமாக தோற்றது.
இந்த போட்டி விராட் கோலிக்கு அனைத்துவிதத்திலும் மறக்கவேண்டிய போட்டி. ஏனெனில் அரிதினும் அரிதான சம்பவமாக கேஎல் ராகுலுக்கு 2 எளிய கேட்ச்களை கோட்டைவிட்டார் கோலி. அதன்பின்னர் 9 பந்தில் 42 ரன்களை விளாசினார் ராகுல். அந்த ரன்கள் தான் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பேட்டிங்கிலும் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒரு கேப்டனாக எப்போதுமே பேட்டிங், ஃபீல்டிங், ஃபிட்னெஸ் என அனைத்துவகையிலும் முன்னின்று வழிநடத்துபவரான கோலி, நேற்று அனைத்துவிதத்திலும் சொதப்பினார். அதற்காக தோல்விக்கு இரு கைகளையும் உயர்த்தி பொறுப்பேற்றார் கோலி.
போட்டிக்கு பின்னர் பேசிய ஆர்சிபி கேப்டன் கோலி, இன்று நல்ல நாளாக அமையவில்லை. கேஎல் ராகுலின் 2 கேட்ச்களை தவறவிட்டேன். அதன்பின்னர் அவர் 40 ரன்களை குவித்தார். ஒருவேளை கேட்ச்சை பிடித்திருந்து, 180 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தால், முதல் பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் எங்களுக்கு உருவாகியிருந்திருக்காது.
நாங்கள் எந்த இடத்தில் தவறவிட்டோம் என்று எங்களுக்கு தெரியும். நான் என் இரு கைகளையும் உயர்த்தி, இந்த தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். முக்கியமான கட்டத்தில் 2 கேட்ச்களை தவறவிட்டேன். ஆனால் கிரிக்கெட் களத்தில் இதெல்லாம் நடக்கும். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் முக்கியம் என்று கோலி தெரிவித்தார்.