ஐபிஎல் 2020: அது மட்டும் சொல்ல முடியாதுங்க; பொறுத்திருந்து பாருங்க..! ட்விஸ்ட் வைத்த ஸ்டீவ் ஸ்மித்
ஜோஸ் பட்லரின் பேட்டிங் ஆர்டரை சொல்ல முடியாது; அது சர்ப்ரைஸ் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13வது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவை பதினாறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிராத அதிரடி தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் இன்றைய போட்டியில் ஆடுகிறார்.
2018 ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் சில போட்டிகளில் பட்லர் மிடில் ஆர்டரில் ஆடினார். ஆனால் மிடில் ஆர்டரில் சரியாக ஆடாத அவர், தொடக்க வீரராக இறக்கப்பட்டபோது, அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதால், அதன்பின்னர் அவர் தொடர்ச்சியாக தொடக்க வீரராகவே இறக்கப்பட்டுவருகிறார். கடந்த சீசனிலும் பட்லர் தொடக்க வீரராகத்தான் ஆடினார்.
இந்த சீசனிலும் அவரை தொடக்க வீரராக காணவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் பட்லரின் பேட்டிங் ஆர்டரை சொல்ல முடியாது; சர்ப்ரைஸ் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்தின் கருத்தின்படி பார்த்தால், ஒருவேளை பட்லர் இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் ஃபினிஷர் ரோலை ஏற்பார் என தெரிகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ஸ்மித் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிறைய உள்ளனர். ஆனால் ஃபினிஷர் ரோலுக்கு சரியான வீரர் இல்லை என்பதால், பட்லரை பின்வரிசையில் இறக்க வாய்ப்புள்ளது.
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக இறங்கிய ஸ்மித் மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து நல்ல தொடக்கத்தை, சஞ்சு சாம்சனுடன் இணைந்து ஆடினார். எனவே இன்றும் ஜெய்ஸ்வாலுடன் ஸ்மித்தே தொடக்க வீரராக இறங்கிவிட்டு, பட்லருக்கு ஃபினிஷர் ரோல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.