RR vs SRH: ஜெயிச்சே தீர வேண்டிய முக்கியமான போட்டியில் சன்ரைசர்ஸுக்கு நேர்ந்த சத்திய சோதனை
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு செல்வது உறுதியாகிவிட்டது. எஞ்சிய ஒரு இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகளுக்குமே உள்ளது.
அதனால் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமான போட்டி என்பதால், ஒவ்வொரு போட்டியுமே மிகக்கடுமையாக இருக்கும்.
அந்த வகையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி.
இந்த போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தவிர்க்க முடியாத காரணத்தால், கட்டாயத்தின் பேரில் ஒரு மாற்றம் செய்யப்படவுள்ளது.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும்போது, கேன் வில்லியம்சனுக்கு தொடைப்பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டது. அந்த காயத்திலிருந்து அவர் முழுமையாக மீளாததால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக, வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஹோல்டர், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே பங்களிப்பு செய்யக்கூடிய சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால், அவர் சன்ரைசர்ஸ் அணியின் காம்பினேஷனுக்கு வலுசேர்ப்பார்.
கடந்த போட்டியில் விஜய் சங்கர் 4 ஓவர்களை முழுமையாக வீசி வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நம்பிக்கையளித்தார். அதனால் மிடில் ஓவர்களை வீசுவதற்கு அவரை பயன்படுத்தலாம் என்ற கூடுதல் ஆப்சனும் சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்:
டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன்/ஜேசன் ஹோல்டர், பிரியம் கர்க், விஜய் சங்கர், அப்துல் சமாத், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன், பாசில் தம்பி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், கார்த்திக் தியாகி.