ராணா தனது அதிரடி அரைசதத்தை அர்ப்பணிக்க காட்டிய கேகேஆர் ஜெர்சி.. யார் அந்த சுரீந்தர்..? நெகிழ்ச்சி சம்பவம்
தனது அதிரடி அரைசதத்தை, காலமான தனது மாமனாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக கேகேஆர் வீரர் நிதிஷ் ராணா செய்த செயல், பாராட்டுகளை பெற்றுவருகிறது.
ஐபிஎல் 13வது சீசனில் சனிக்கிழமையான நேற்று 2 போட்டிகள் நடந்தன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி, 7.2 ஓவரில் வெறும் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின்னர் ராணாவும் சுனில் நரைனும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி, கேகேஆர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து, 194 ரன்களை குவிக்க உதவினர். ராணாவும் நரைனும் இணைந்து 59 பந்தில் 115 ரன்களை குவித்தனர்.
ராணா 53 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 81 ரன்களையும், சுனில் நரைன் 32 பந்தில் 64 ரன்களையும் குவித்தனர்.
இந்த போட்டியில் அரைசதம் அடித்ததும், நிதிஷ் ராணா, சுரீந்தர் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கேகேஆர் ஜெர்சியை காட்டி, அந்த அரைசதத்தை அர்ப்பணித்தார். யார் அந்த சுரீந்தர், ராணா ஏன் அதை காட்டினார் என்று அப்போது தெரியவில்லை.
பின்னர், சுரீந்தர் என்பது அவரது மாமனார் என்பதும், போட்டிக்கு முந்தைய நாளான(வெள்ளிக்கிழமை 23ம் தேதி) அவர் புற்றுநோயால் உயிரிழந்ததும் தெரியவந்தது. எனவே காலமான தனது மாமனாருக்கு தனது அரைசதத்தை அர்ப்பணித்து, இரங்கல் தெரிவிக்கும் விதமாகத்தான் ராணா அச்செயலை செய்தார் என்பது தெரியவந்தது.