ஆடவும் முடியாமல் ஆஸ்திரேலியாவுக்கும் போகமுடியாமல் தவிக்கும் மிட்செல் மார்ஷ்..! நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ..?
ஐபிஎல்லில் இருந்து காயத்தால் முழுவதுமாக விலகியபோதிலும், விமானம் இல்லாததால், ஆஸ்திரேலியாவிற்கு செல்லமுடியாமல் தவித்துவருகிறார் மிட்செல் மார்ஷ்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆர்சிபிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் தோற்றது.
அந்த போட்டியில், ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியபோது, பந்துவீசிய மிட்செல் மார்ஷ், இரண்டே பந்து மட்டுமே வீசினார். 2வது பந்து வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அத்துடன் பெவிலியன் திரும்பிய மிட்செல் மார்ஷ், 2வது இன்னிங்ஸில் சன்ரைசர்ஸ் அணி இக்கட்டான நிலையில், இருந்தபோது வலியை பொறுத்துக்கொண்டு பேட்டிங் ஆட வந்தார். ஆனால் கால் வலியால் ரன்னே அடிக்காமல் அவுட்டானார்.
காயம் தீவிரமானது என்பதால், அவர் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இல்லாதது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்கு மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரும் டெஸ்ட் அணி கேப்டனுமான ஜேசன் ஹோல்டர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சீசனிலிருந்து விலகியபோதும், மிட்செல் மார்ஷால் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முடியவில்லை. கொரோனா அச்சுறுத்தலால் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஆஸ்திரேலியாவில் பெர்த்திற்கு விமானம் இல்லை. எனவே அவர் ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்துவருகிறார்.
மிட்செல் மார்ஷை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிசிசிஐயிடம் பேசியுள்ளது. பிசிசிஐ இதுதொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம். மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியாவிற்கு சென்றாலும், அங்கு 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்.