ஐபிஎல் 2020: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மரண அடி..! இருக்குற பிரச்னையில இது வேறயா..?
ஐபிஎல் 13வது சீசனிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் முழுவதுமாக விலகும் சூழல் உருவாகியுள்ளது.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த சீசனின் 3வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் மோதின. அந்த போட்டியில் ஆர்சிபி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆர்சிபி நிர்ணயித்த 164 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல், 153 ரன்களுக்கே சுருண்டு 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு, அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக இருப்பதுதான் காரணம். மும்பை இந்தியன்ஸில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, சிஎஸ்கேவில் தோனி, கேகேஆரில் ஆண்ட்ரே ரசல் ஆகியோரை போல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஃபினிஷர் கிடையாது. அதனால் அந்த அணி அதிகமாக அதன் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவையே சார்ந்துள்ளது.
இந்த சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், சன்ரைசர்ஸின் ஃபினிஷராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது ஸ்லிப் ஆகி, அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அந்த போட்டியில் இரண்டே பந்து வீசியதுடன் பெவிலியனுக்கு திரும்பிய மிட்செல் மார்ஷ், வலியை பொறுத்துக்கொண்டு கடைசி நேரத்தில் பேட்டிங் ஆட வந்தார். ஆனால் டக் அவுட்டாகி வெளியேறினார்.
மிட்செல் மார்ஷின் காயம் தான், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸூக்கு பின்னடைவாகவும், தோல்விக்கும் வழிவகுப்பதாகவும் அமைந்தது. இந்நிலையில், அவர் இந்த சீசனிலிருந்து முழுமையாக விலகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது கணுக்கால் காயத்தின் விளைவாக, அவர் இந்த சீசனில் இனிமேல் ஆடமாட்டார் என தெரிகிறது. அவருக்கான மாற்றுவீரரை ஃபிட் செய்வது சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் சவால்.