#KXIPvsRR டுடே கெய்ல் ஷோ.. காட்டடி அடித்து 99ல் அவுட்டான யுனிவர்ஸ் பாஸ்.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு
ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவரில் 185 ரன்களை குவித்து 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 13வது சீசனில் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் ராகுலும் கெய்லும் இணைந்து அபாரமாக ஆடினர். கெய்ல் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் சிக்ஸர்களை விளாச, மறுமுனையில் ராகுல் சிக்ஸர்களை விளாசினாலும், கெய்ல் அடித்து ஆடியதால், அவருக்கு சிங்கிள் எடுத்து கொடுத்து ஆடினார்.
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கெய்ல், தனது அதிரடியை தொடர, ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 14 ஓவரில் 120 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த பூரான், 10 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று சிக்ஸர்களை விளாசிக்கொண்டிருந்த கெய்ல், 99 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்தார்.
63 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்தார் கெய்ல். இந்த போட்டியில் அடித்த சிக்ஸர்களின் மூலம், டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார் கெய்ல். கெய்லின் அதிரடியால் 20 ஓவரில் 185 ரன்களை குவித்த பஞ்சாப் அணி, 186 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.