சச்சின் டெண்டுல்கரின் சாதனையையே தகர்த்தெறிந்த கேஎல் ராகுல்..! நம்பர் 1 இடத்தை பிடித்து செம சாதனை
ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்தெறிந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் கேஎல் ராகுல்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டி முழுக்க முழுக்க ஒருதலைபட்சமானதாக முடிந்தது.
துபாயில் நடந்த இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயித்த 207 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் 109 ரன்களுக்கே சுருண்டு 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது ஆர்சிபி.
இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், அனைத்துவகையிலும் முன்னின்று வழிநடத்தினார். பேட்டிங்கில் தெறிக்கவிட்டார். அதிரடியாக ஆடிய ராகுல் 69 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 132 ரன்களை குவித்தார். ஐபிஎல்லில் இந்திய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
நேற்றைய போட்டியில் ரன் கணக்கை தொடங்கியதுமே, ஐபிஎல்லில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை ராகுல் எட்டினார். அதுவும் அதை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
நேற்று ஆடியது, ஐபிஎல்லில் ராகுலின் 60வது இன்னிங்ஸ். தனது 60வது ஐபிஎல் இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய ராகுல், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். ஐபிஎல்லில் சச்சின் 63 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்து, அதிவேகமாக 2000 ரன்கள் மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார் கேஎல் ராகுல்.
இந்த பட்டியலில் 68 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்த கம்பீர் 3வது இடத்திலும், 69 இன்னிங்ஸ்களில் அடித்த ரெய்னா 4வது இடத்திலும், 70 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்த சேவாக் ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.