KKR vs DC: நமக்கு வேற வழியே இல்ல.. அவரை டீம்ல சேர்த்தே தீரணும்..! கேகேஆரின் அதிரடி முடிவு
டெல்லி கேபிடள்ஸூக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 13வது சீசனில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது.
எஞ்சிய ஒரு இடத்திற்கு கேகேஆர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகளுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
கேகேஆர் அணி முதல் 10 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் இருந்தாலும், பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருவதால், கேகேஆர் அணிக்கு அடுத்த 4 போட்டிகளும் மிக முக்கியம்.
கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில், இன்று டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது கேகேஆர் அணி. அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆண்ட்ரே ரசலுக்கு பதிலாக கடந்த போட்டியில் களமிறக்கப்பட்ட டாம் பாண்ட்டன் நீக்கப்பட்டு, கேகேஆரின் மேட்ச் வின்னர் சுனில் நரைன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுனில் நரைனின் பவுலிங் ஆக்ஷன் சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில், அவர் இடையில் 2 போட்டிகளில் ஆடவில்லை. அவரது பவுலிங் ஆக்ஷனில் பிரச்னையில்லை; அவர் ஐபிஎல்லில் தொடர்ந்து பந்துவீசலாம் என்று ஐபிஎல் நிர்வாகம் க்ரீன் சிக்னல் கொடுத்த பிறகும் கூட, கடந்த போட்டியில் நரைன் சேர்க்கப்படவில்லை. ஆனால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய இன்றைய போட்டியில் அவர் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் டாம் பாண்ட்டன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். ஏற்கனவே கில்லும் திரிபாதியும் ஓபனிங்கில் செட்டாகிவிட்டனர். எனவே அவர்களையே ஓபனிங் செய்யவிட்டு, வழக்கம்போல ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், பாட் கம்மின்ஸ் ஆகிய பேட்டிங் ஆர்டரை பின்பற்றலாம். பின் வரிசையில் சுனில் நரைன் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கக்கூடும். பவுலிங்கிலும் போட்டியை வென்று கொடுப்பார்.
ஆண்ட்ரே ரசலுக்கு இந்த சீசன் சரியாக அமையவில்லை. பேட்டிங்கில் அவர் ஒரு பெரிய இன்னிங்ஸ் கூட ஆடவில்லை. மேலும் அடுத்தடுத்து காயங்களால் அவதிப்படுகிறார். எனவே அவர் இன்றும் ஆடமாட்டார்.
கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், லாக்கி ஃபெர்குசன், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.