ஷுப்மன் கில் பொறுப்பான அரைசதம்; மோர்கன் க்ளாஸ் பேட்டிங்..! சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய கேகேஆர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி அபார வெற்றி பெற்று இந்த சீசனில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதின. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 142 ரன்கள் மட்டுமே அடித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோவையே அதிகமாக சார்ந்திருக்கிறது. மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது. அது இன்றைய போட்டியில் அப்பட்டமாக தெரிந்தது.
பேர்ஸ்டோ வெறும் ஐந்து ரன்களில் நடையை கட்ட, களத்தில் செட்டில் ஆகியிருந்த வார்னரை 36 ரன்களில் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். அதன்பின்னர் மனீஷ் பாண்டே அரைசதம் அடித்தும், அதனால் அணிக்கு ஒரு பயனும் இல்லை. அரைசதம் அடித்த மனீஷ் பாண்டே, வழக்கம்போலவே கடைசி வரை களத்தில் நின்று பெரிய இன்னிங்ஸை ஆடாமல், அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிதிமான் சஹா 30 ரன்கள் அடித்தார். இதையடுத்து 20 ஓவரில் 142 ரன்கள் மட்டுமே அடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 143 ரன்களை கேகேஆருக்கு இலக்காக நிர்ணயித்தது.
143 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் டக் அவுட்டானார். அதன்பின்னர் ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணா, பவர்ப்ளே ஃபீல்டிங் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி 13 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 26 ரன்களை வேகமாக அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் ரஷீத் கானின் பந்தில் டக் அவுட்டானார்.
அதன்பின்னர் ஷுப்மன் கில்லுடன் இயன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். கில் அவசரப்படாமல் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். களத்திற்கு வந்ததும் மோர்கனுக்கு ஷாட் சரியாக கனெக்ட் ஆகாமல் திணறினார். ஆனால் அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக செட்டில் ஆகி பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடித்தார். சிறப்பாக ஆடிய கில்லும் மோர்கனும் இணைந்து 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி, கேகேஆர் அணியை வெற்றி பெற செய்தனர்.