ஐபிஎல் 2020: என்னோட ஹீரோ அவருதான்.. கபில் தேவ் புகழாரம்
ஐபிஎல் 13வது சீசனில் தன்னை கவர்ந்த வீரர் யார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் உலக கோப்பை வின்னிங் கேப்டனுமான கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, கார்த்திக் தியாகி ஆகிய இளம் வீரர்கள் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் பாராட்டுகளையும் குவித்தனர்.
ஆனால் இவர்களில், தமிழ்நாட்டை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலரும் யார்க்கர் மன்னனுமான டி.நடராஜன் தான், ஐபிஎல் 2020ல் தனது ஹீரோ என கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசனில் தனது துல்லியமான யார்க்கர்களின் மூலம் இந்நாள் மற்றும் முன்னாள் ஜாம்பவான்கள் பலரையும் கவர்ந்ததுடன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 அணியிலும் இடம்பிடித்தார். இந்த சீசனில் பதினாறு போட்டிகளில் ஆடி பதினாறு விக்கெட்டுகளை வீழ்த்திய டி.நடராஜன், டெத் ஓவர்களில் யார்க்கர்களை மிக துல்லியமாக வீசி, சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவே மாறிவிட்டார்.
இந்நிலையில், நடராஜன் குறித்து கருத்து தெரிவித்த கபில் தேவ், ஐபிஎல் 13வது சீசனில், எனது ஹீரோ நடராஜன் தான். பயமே இல்லாமல், அதிகமான யார்க்கர்களை துல்லியமாக வீசினார். இன்றைக்கு மட்டுமல்ல; 10 ஆண்டுகளாகவே யார்க்கர் தான் பெஸ்ட் பந்து. அதை மிகச்சிறப்பாக வீசுகிறார் நடராஜன் என கபில் தேவ் புகழாரம் சூட்டினார்.