ஐபிஎல் 2020: கோலியின் படுமோசமான கேப்டன்சி.. கடுமையாக விளாசிய கம்பீர்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சி முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார் கவுதம் கம்பீர்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனிலும் வழக்கம்போலவே கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, தொடக்கமே மரண அடியாக விழுந்துள்ளது.
சன்ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி ஆடிய முதல் போட்டியில், ஆர்சிபி தட்டுத்தடுமாற்றி வெற்றி பெற்ற நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
அந்த போட்டியில் விராட் கோலி, ஃபீல்டிங், பேட்டிங், கேப்டன்சி என அனைத்திலுமே சொதப்பினார். ராகுலுக்கு 2 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டார் கோலி. அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்ட ராகுல், அதன்பின்னர் எதிர்கொண்ட 9 பந்தில் 42 ரன்களை குவித்தார். டெத் ஓவரில் ராகுல் அடித்த அந்த ஸ்கோர் தான் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, ஆர்சிபி அணியின் மன உறுதியை சிதைத்தது. பேட்டிங்கிலும் கோலி வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கோலியின் ஐபிஎல் கெரியரில் இப்படி ஒரு மோசமான போட்டி அமைந்ததேயில்லை. அவருக்கு அனைத்து விதத்திலும் மறக்க வேண்டிய போட்டி அது.
அந்த போட்டியில் 18 ஓவரில் 157 ரன்கள் அடித்திருந்த பஞ்சாப் அணி, கடைசி 2 ஓவரில் 49 ரன்களை குவித்தது. ராகுலின் அதிரடியால் தான் இது சாத்தியமானது. ஷிவம் துபே வீசிய கடைசி ஓவரில் ராகுல் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். கருண் நாயர் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடித்தார். ஆக மொத்தத்தில் கடைசி ஓவரில் மட்டும் 23 ரன்கள் அடிக்கப்பட்டது.
நன்றாக செட்டில் ஆகி சதமடித்த ராகுல் களத்தில் நிற்கும்போது, கடைசி ஓவரை ஷிவம் துபேவிடம் கொடுத்த கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் கம்பீர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், ஷிவம் துபே அவரது முதல் 2 ஓவர்களை நன்றாகத்தான் வீசியிருந்தார். அதனால் அவருக்கு 3வது ஓவரை கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால் அது கடைசி ஓவர் இல்லை. கடைசி ஓவரை அவரிடம் கொடுத்திருக்கக்கூடாது. அதுவும் சதமடித்த ராகுல் களத்தில் இருக்கும்போது துபேவிடம் கொடுக்கக்கூடாது. நவ்தீப் சைனி அல்லது டேல் ஸ்டெய்னுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். டேல் ஸ்டெய்ன் சிறந்த டெத் பவுலர் கிடையாது. ஆனாலும் அணியின் பெஸ்ட் பவுலரிடம் தான் கடைசி ஓவரை கொடுக்க வேண்டும்.
நவ்தீப் சைனியின் 4 ஓவர் பவுலிங் கோட்டாவை 17வது ஓவருக்குள்ளாகவே முடித்துவிட்டார் கோலி. எனவே கடைசி ஓவரை உமேஷ் யாதவிடமாவது கொடுத்திருக்க வேண்டும். ஷிவம் துபேவிடம் கொடுத்தது மோசமான முடிவு என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.