நீங்க பண்றது ரொம்ப தப்பு; களத்தில் வைத்தே அம்பயரை செம காட்டு காட்டிய தோனி..!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கள நடுவரின் செயல்பாட்டிற்கு தோனி கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஐபிஎல் 13வது சீசனின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் சிஎஸ்கே அணி தோற்றது. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சனின் காட்டடி அரைசதம்(32 பந்தில் 74 ரன்கள்), ஸ்மித்தின் பொறுப்பான அரைசதம் மற்றும் ஆர்ச்சரின் கடைசி ஓவர் ருத்ரதாண்டவத்தால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்தது.
217 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 200 ரன்கள் அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றது.
இந்த போட்டியில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, தீபக் சாஹர் வீசிய 18வது ஓவரில் டாம் கரனுக்கு விக்கெட் கீப்பிங் கேட்ச் என்று களநடுவர் ஷாம்சுதீன் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து தொடையில் பட்டது என்பதால் அதிர்ச்சியடைந்த டாம் கரன், ரிவியூ எடுக்க முயன்றார். ஆனால் ரிவியூ இல்லாததால், டாம் கரன் அதிருப்தியடைந்தார். கண்டிப்பாக பேட்டில் படவில்லை என்றார்.
இதையடுத்து களநடுவர்கள் இருவரும் பேசி முடிவெடுத்து, டிவி அம்பயரை பரிசோதிக்க சொல்வது என முடிவெடுத்தனர். ஆனால் ஐசிசி விதிப்படி, களநடுவர் அவுட் கொடுத்துவிட்டால், அவுட் தான். அதை தேர்டு அம்பயர் மாற்ற முடியாது. சம்மந்தப்பட்ட வீரர் ரிவியூ எடுப்பது என்பது வேறு. ஆனால் அவர்களிடத்தில் ரிவியூ மீதமில்லாதபட்சத்தில், களநடுவர் அவுட் கொடுத்துவிட்டு, பின்னர் தேர்டு அம்பயரின் முடிவை பெற தீர்மானித்தது தவறு என்பதால், கடுப்பான தோனி, களநடுவர்களிடம் வாதிட்டார்.
ஆனால் களநடுவர்கள் தேர்டு அம்பயரை ஆலோசிப்பதில் உறுதியாக இருந்தனர். டிவி அம்பயர் ரிவியூ செய்ததில், பந்து தொடையில் பட்டது மட்டுமல்லாது, பந்து தரையில் பட்ட பின்னர் தான் தோனி கேட்ச் பிடித்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து டாம் கரன் மீண்டும் அழைக்கப்பட்டு பேட்டிங் ஆடவைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காகவும் பேசப்பட்டுவருகிறது.