எந்த நோக்கமுமே இல்லாமல் சும்மா கடமைக்கு ஆடிய சிஎஸ்கே.. டெல்லி கேபிடள்ஸிடம் படுதோல்வி
டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே படுதோல்வியடைந்துள்ளது.
ஐபிஎல் 13வது சீசனில் துபாயில் நடந்த இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் அணியும், தோனி தலைமையிலான அனுபவ அணியும் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, டெல்லி கேபிடள்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷாவும் தவானும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு பிரித்வியும் தவானும் இணைந்து 10.4 ஓவரில் 94 ரன்களை குவித்தனர்.
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி ஷா, நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், பியூஷ் சாவ்லாவின் பந்தை இறங்கிவந்து அடிக்க முயன்றபோது, சரியாக அடிக்காமல் விட்டார். ஆனால் பந்து பக்கத்திலேயே கிடப்பதை உணராமல் லேசாக ஓடமுயன்று, பின்னர் சுதாரித்து க்ரீஸுக்குள் வர முயன்றார். ஆனால் விடுவாரா தோனி? அதற்குள்ளாக பந்தை எடுத்து ஸ்டம்பில் அடித்ததால் பிரித்வி ஷா, 43 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ரிஷப் பண்ட் ஓரளவிற்கு அடித்து ஆட, ஷ்ரேயாஸ் ஐயர் சரியாக ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறினார். தட்டுத்தடுமாறி 22 பந்தில் 26 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்ட 22 பந்தில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.
கடைசி ஓவரில் ரிஷப் பண்ட் ஒரு பவுண்டரியும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு பவுண்டரியும் அடிக்க, லெக் பைஸில் ஒரு பவுண்டரி கிடைக்க, கடைசி ஓவரில் 14 ரன்கள் அடித்து இன்னிங்ஸை முடித்த டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 175 ரன்களை குவித்து 176 என்ற மிகச்சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.
176 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில், ஏன் இருக்கிறோம் என்றே தெரியாமல் இருக்கும் முரளி விஜய் இந்த போட்டியிலும் சொதப்பினார். ஷேன் வாட்சன் 14 ரன்களிலும் முரளி விஜய் 15 பந்தில் வெறும் 10 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் ஐந்து ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
இலக்கை விரட்டும் முனைப்பே இல்லாமல் தொடக்கம் முதல் கடைசி வரை சிஎஸ்கே அணி மந்தமாகவே ஆடியது. இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணடித்துவருகிறார். கேதர் ஜாதவ் 26 ரன்களும், வழக்கம்போலவே களத்தில் தனி ஒருவனாக நின்று போராட முயன்ற டுப்ளெசிஸ் 43 ரன்கள் அடித்தார். தோனி எந்த நோக்கமுமே இல்லாமல் 15 ரன்கள் அடித்தார். ஆனால் தோனி வெற்றி இலக்கை விரட்ட கொஞ்சம் கூட முயலவே இல்லை. சிஎஸ்கே அணி 20 ஓவரில் வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.