ஐபிஎல் 2020: சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்; 2 சூப்பர் ஸ்டார்கள் கம்பேக்! உறுதிப்படுத்திய அணி நிர்வாகம்
சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், சிஎஸ்கே அணி குறித்த முக்கியமான நல்ல தகவலை அந்த அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு இந்த சீசனின் தொடக்கம் சிறப்பாக இல்லை. இந்த சீசனில் ரெய்னா ஆடாத நிலையில், அதன் தாக்கம் சிஎஸ்கேவில் கடுமையாக உள்ளது. சிஎஸ்கே அணியின் சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கும் இந்த சீசனில் ஆடவில்லை.
அதுமட்டுமல்லாது, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்த அம்பாதி ராயுடு, அடுத்த 2 போட்டிகளில் ஆடாத நிலையில், அந்த 2 போட்டிகளிலுமே சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.
இந்த சீசனில் இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, சிஎஸ்கேவின் மேட்ச் வின்னரும் அருமையான ஆல்ரவுண்டருமான ட்வைன் பிராவோவும் ஆடவில்லை. ட்வைன் பிராவோ சிஎஸ்கே அணிக்கு இக்கட்டான நேரங்களில், பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்துவகையிலும் முக்கியமான கேமியோ ரோலை செய்து வெற்றி பெற்றுக்கொடுக்கக்கூடிய வீரர் ஆவார்.
இவ்வாறு சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களும், மேட்ச் வின்னர்களுமாக திகழ்ந்தவர்கள் அந்த அணியில் ஆடாததால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளிடம் படுதோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அக்டோபர் 2ம் தேதி நடக்கும் அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. இந்நிலையில், அடுத்த போட்டியில் வெற்றி பெற்று செம கம்பேக் கொடுக்கும் முனைப்பில் உள்ள சிஎஸ்கே அணி உள்ள நிலையில், நற்செய்தியை தெரிவித்துள்ளார் சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன். அடுத்த போட்டியில் ராயுடு மற்றும் பிராவோ ஆகிய இருவருமே ஆடுவார்கள் என தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய காசி விஸ்வநாதன் ராயுடு காயத்திலிருந்து மீண்டுவிட்டார். அடுத்த போட்டியில் கண்டிப்பாக ஆடுவார். வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பிராவோவும் வலையில் அருமையாக பந்துவீசுகிறார். அவரும் தொடையில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து முழுமையாக மீண்டுவிட்டார் என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ராயுடு மற்றும் பிராவோவின் கம்பேக் சிஎஸ்கே அணிக்கு வலு சேர்க்கும் என்பதால், அடுத்த போட்டியில் சிஎஸ்கேவின் முரட்டு கம்பேக்கை எதிர்பார்க்கலாம்.