ஐபிஎல் 2020: இந்திய இளம் வீரரை லெஜண்ட் மேத்யூ ஹைடனுடன் ஒப்பிட்டு புகழாரம் சூட்டிய கிறிஸ் மோரிஸ்
இந்தியாவின் இளம் வீரரை ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடனுடன் ஒப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளார் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடந்துவருகின்றன.
ரசிகர்கள் இல்லாதது இளம் வீரர்களுக்கு அவர்களது இயல்பான ஆட்டத்தை சுதந்திரமாக ஆடுவதற்கு வழிவகை செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அதன் விளைவாக இந்த சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது.
தேவ்தத் படிக்கல்(ஆர்சிபி), ராகுல் டெவாட்டியா(ராஜஸ்தான்), ரியான் பராக்(ராஜஸ்தான்), ரவி பிஷ்னோய்(பஞ்சாப்), வாஷிங்டன் சுந்தர்(ஆர்சிபி), டி.நடராஜன்(சன்ரைசர்ஸ்), கார்த்திக் தியாகி(ராஜஸ்தான்), ஷுப்மன் கில்(கேகேஆர்), இஷான் கிஷன்(மும்பை இந்தியன்ஸ்) உள்ளிட்ட பல இளம் வீரர்கள் இந்த சீசனில் அபாரமாக ஆடிவருகின்றனர்.
குறிப்பாக ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக ஆடிவரும் இளம் இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல், தனது அபாரமான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த சீசனில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்திய தேவ்தத் படிக்கல், 10 போட்டிகளில் 321 ரன்களை குவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரையுமே அதிகமாக சார்ந்திருந்த ஆர்சிபி அணிக்கு, பேட்டிங்கில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தியுள்ளார் தேவ்தத் படிக்கல். விராட் கோலியின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார் தேவ்தத் படிக்கல்.
கவர் டிரைவ், புல் ஷாட், ஃப்ளிக் ஷாட் என அனைத்து ஷாட்டுகளையும் அபாரமாக ஆடுகிறார் படிக்கல். படிக்கல்லின் முதல் இன்னிங்ஸை பார்த்ததுமே, அவரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் ஆடும் விதம் யுவராஜ் சிங்கை போல இருப்பதாக பலர் யுவராஜ் சிங்குடன் அவரை ஒப்பிட்டனர்.
ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், படிக்கல்லை ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடனுடன் ஒப்பிட்டுள்ளார், ஆர்சிபி அணியில் படிக்கல்லின் சக வீரரான, ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ்.
படிக்கல் குறித்து பேசிய கிறிஸ் மோரிஸ், தேவ்தத் படிக்கல் அபாரமான பேட்ஸ்மேன். மேத்யூ ஹைடனை போன்று ஆடுகிறார் படிக்கல். ஹைடன் பெரிய செஸ்ட்டை கொண்டவர். படிக்கல் உடல் ரீதியாக ஹைடனை போன்றவர் அல்ல. ஆனால் டெக்னிக் மற்றும் பந்தை அடிக்கும் விதத்தில் ஹைடனை அப்படியே பிரதிபலிக்கிறார் படிக்கல் என்று கிறிஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார்.