ஐபிஎல் 2020: ஆத்திரத்தை அடக்கமுடியாத கெய்லுக்கு ஆப்படித்த ஐபிஎல்
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில், சதத்தை தவறவிட்ட கடுப்பில் கெய்ல் செய்த செயலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 13வது சீசனில் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், 63 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் அடித்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
சதத்திற்கு ஒரு ரன்னே தேவைப்பட்ட நிலையில், ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தில் போல்டாகி சதத்தை நூழிலையில் தவறவிட்டார். ஏற்கனவே ஐபிஎல்லில் ஆறு சதமடித்துள்ள கெய்ல், ஏழாவது சதத்தை தவறவிட்ட கடுப்பில், பேட்டை தூக்கிவீசினார். பின்னர் அந்த பேட்டை மேக்ஸ்வெல் எடுத்து கெய்லிடம் கொடுத்தார்.
கெய்ல் பேட்டை தூக்கி வீசியது ஐபிஎல் விதிமுறைகளின்படி லெவல் 1 குற்றம் என்பதால், அவரது போட்டி ஊதியத்தில் 10 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்தது குறிப்பிடத்தக்கது.