ஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..? பிசிசிஐ அதிரடி
ஐபிஎல்லில் அடுத்த சீசன் முதல் ஒவ்வொரு அணியிலும் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் ஆட அனுமதிக்கப்படவுள்ளனர்.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அடுத்த சீசனுக்கான ஏலம் பெரிய ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஐந்து வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களையும் கழட்டிவிட வேண்டும். அந்தவகையில், அடுத்த சீசனில் அனைத்து அணிகளுமே மறுகட்டமைப்பு செய்யப்பட்ட அணியாக இருக்கும்.
அடுத்த சீசனில் சில மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதுவரை ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியிலும் ஆடும் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த சீசனில் ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும் சில அணிகள் ஐபிஎல் நிர்வாகக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
சில அணிகள் ஐந்து வெளிநாட்டு வீரர்களை ஆடும் லெவனில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகக்குழு ஆலோசித்துவருவதாகவும் பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.