ஐபிஎல் 2021: டெல்லி கேபிடள்ஸ் தக்கவைக்கும் 5 வீரர்கள் இவங்கதான்..?
ஐபிஎல் 2021ல் டெல்லி கேபிடள்ஸ் அணி தக்கவைக்க தகுந்த ஐந்து வீரர்கள் யார் யார் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு மிகச்சிறந்த சீசனாக அமைந்தது. ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, சிறந்த வீரர்களை அணியில் எடுத்து, அவரவர்களுக்கான ரோலை தெளிவுபடுத்தி வலுவான அணியை கட்டமைத்ததன் விளைவாக, இந்த சீசனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேபிடள்ஸ் அணி.
ஆனால் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்று, கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், தவான், அஷ்வின், அக்ஸர் படேல் ஆகிய இந்திய வீரர்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரபாடா, ஹெட்மயர், நோர்க்யா ஆகிய வெளிநாட்டு வீரர்களும் சிறப்பாக உள்ளனர்.
இந்த சீசனின் முதல் பாதி பிரித்வி ஷாவிற்கு சிறப்பாக அமைந்தது. ஆனால் ரிஷப் பண்ட் இந்த சீசன் முழுவதுமே சரியாக ஆடவில்லை. அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும்.
அந்தவகையில், டெல்லி கேபிடள்ஸ் அணி அடுத்த சீசனில் தக்கவைக்க தகுந்த ஐந்து வீரர்கள் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ஒரு அணி 3 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும்.
டெல்லி கேபிடள்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தவான் ஆகிய 3 இந்திய வீரர்களையும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரபாடா ஆகிய 2 வெளிநாட்டு வீரர்களையும் தக்கவைக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.