கூட்டணி பலத்தால் மாபெரும் வெற்றி.. பெரிய அளவில் கை கொடுத்த சிராக் பஸ்வான்!
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் முன்னிலை பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகியவை அதிக இடங்களில் முன்னிலை வகிக்க, மகாபந்தன் கூட்டணி பின்தங்கியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. இதனால் அனைவரின் மத்தியில் பீகார் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. அந்த மாநிலத்தில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்கட்டமாக 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டன.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாஜக, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதேபோல் மகாபந்தன் INDIA கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் , காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை இடம் பெற்றிருந்தன. இதனால் இந்த தேர்தல் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு கட்டங்களான பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பின்னர் மின்னணு வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டன. ஆரம்ப முதலே தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களிலும், மகாபந்தன் கூட்டணி 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காலை 11.30 மணி நிலவரப்படி ஜேடியூ 76, பாஜக 84, ஆர்ஜேடி 35, சிராக் பாஸ்வானின் எல்ஜேபி 23, காங்கிரஸ் 07, சிபிஐ(எம்-எல்) 06, அவாமி மோச்சா 04 உள்ளிட்ட கட்சிகள் முன்னிலையில் உள்ளன. தனிப்பெரும் கட்சியாக ஜேடியூவும் பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. லாலு பிரசாத் கட்சியின் ஆர்ஜேடி தற்போது 3-வது இடத்தில் உள்ளது. இதில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 23 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் முன்னிலை பெற்று 5வது இடத்தில் உள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியால் பெரிய அளவில் கை கொடுத்தால் எதிர்பாராத வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தமிழக பாஜகவின் எக்ஸ் தளத்தில்: பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பீகார் மக்களின் நம்பிக்கையை பெற்று மீண்டும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி மக்களின் வெற்றி என தெரிவித்துள்ளார்.